
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை
பதிகங்கள்

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கின் தகளிநெய் சோர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவனசூ டாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.
English Meaning:
Egoity Died and Siva AppearedInto the thousand petalled lotus (in Sahasrara),
The Kundalini fire shot up fierce;
And as with the fat of my heart`s love, I made it blaze,
She the Sakti appeared,
She the Jewel of worlds all;
The one, he died, my Egoity
And the One, He appeared, my Siva.
Tamil Meaning:
உலகியலிற் செல்லும் செலவிலிருந்து மீண்டவரது உள்ளக் கமலமாகிய தகளியில் ஞானமாகிய விளக்கு அணையாது எரியும் படி, தூண்டா விளக்கின் தகளியில் நெய்யையே, உலகத் தலைவியாகிய ஒப்பற்ற ஒருத்தி எடுத்துவார்க்கும் செயலை முன்சென்று மேற்கொண்டாள், அதனால், அவ்விளக்கின் ஒளி விளக்கத்தில், அனைவரிலும் மாட்சி மிக்கோள் ஒருவனது கை வன்மை இனிது நிகழ்ந்தது.Special Remark:
`இது குறிப்பிடத்தக்க ஒன்று` என்பது குறிப்பெச்சம். ``அங்கி`` என்றது சுடரை. இது ஞானமே மிக - மிகும்படி, `சோர்வித்தல்` என்னும் பிறவினைத் தொழிற்பெயரில் விவ்விகுதி தொகுக்கப்பட்டது. சோர்வித்தல் - சொரிதல்; வார்த்தல். `சோர் வித்தலும்` என்னும் உம்மை சிறப்பு. தூண்டா விளக்காவது மணி விளக்கு. அஃது மாணிக்க மணியே விளக்காக வைக்கப்பட்டு ஒளி தருவது. ``நொந்தா ஒணசுடர்`` என்பேது இதனையே, இதில் மணியே தகளியாகவும், அதன் தன்மையே நெய்யாகவும், அதன் ஒளியே சுடராகவும் இங்குக் கொள்ளப்படுதலின், சிவத்தை அவற்றினுள் தகளியாகவும், அதன் தன்மையாகிய அறிவு அல்லது ஞானத்தை நெய்யாகவும், அருட் சத்தியை உள்ளத் தகழியில் ஞானச் சுடர் அணைந்து விடாதபடி அந்நெய்யை வார்க்கும் பெண்ணாகவும் உருவகித்தார். `புவன சூடாமணி யாகிய ஒருத்தி` என்க. ஞானச் சுடர் ஒளிவிட்டு விளங்கவே, அவ்விளக்கத்தில் சிவத்தின் செயற்பாடு தடையின்றி நிகழ்ந்தது என்பதாம்,ஞானம் முதலியவற்றைச் சுடர் முதலியவாக உருவகித்து, உள்ள கமலத்தைத் தகளியாக உருலவகம் செய்யாமையால், இஃது ஏகதேச உருவகம். `அங்கு, தூண்டா விளக்கு, தகளி, நெய்` என்பன சிறப்புருவங்கள் யாவரினும் மாட்சிமையுடைய ஒருவன் சிவன். ``கை`` என்பது அதன் செயலைக் குறித்த ஆகுபெயர்.
இதனால், முத்தரது அறிவில் அருட்சத்தி மேன்மேற் பதிந்து ஞானத்தை மிகுவித்தலால், அவர்களது அறிவில் சிவ விளக்கம் மிகுந்து, சிவானந்தம் மேன்மேல் விளைவதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage