
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 27. அணைந்தோர் தன்மை
பதிகங்கள்

உள்ளம் சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளமின்றிக் கருக்கடந் தேனே.
English Meaning:
All My Doings Became Siva`sHaving pursued the ways of Charya and the rest,
And having received the Bounteous Being`s Grace,
I stand praising Him ever;
All that I do,
I see as of Siva`s doings;
With no more Karma left,
I crossed the sea of births.
Tamil Meaning:
வள்ளலாகிய சிசிவபெருமான் முதலில் `சரியை, கிரியை, யோகம்` என்னும் தவ நிலையில் என் உள்ளத்தில் உள்ளப் படும் பொருளாய்ப் பொருந்தி, பின்பு ஞான நிலையில் தனது அருளை வைத்த அந்தப் பயனையே நினைந்து நான் போற்றிக்கொண்டு, என்னால் நிகழ்த்தப்படும் செயல்களையெல்லாம் என் செயலாகக் காணாது அவன் செயலாகவே நான் கண்டுவருதலால், எனக்கெனச் செயலின்றி பிறவியைக் கடந்து நிற்கின்றேன்.Special Remark:
`உள்ளம் ஒட்டியே` என இயைக்க. ஒட்டுதல், உண்மை மாத்திரையால் விளங்குதல், ஆகவே, ``சரியாதி`` என்பதும் சரியை முதலிய மூன்றையே குறித்தன. `அன்பு` எனப் பொருள் தரும் ``அருத்தி`` என்பது இங்கு `அருள்` எனப் பொருள் தந்தது. சிவன் சீவர்களிடத்தில் தான் அவை என்னாது ஒன்றி நிற்றல் அருள் வடி வாயேயாகலின் தம்மிடம் சிவன் அவ்வாறு நின்றமையை, ``அருத்தி வைத்து`` என்றார். அதனானே `அந்நிலை ஞான நிலை`` என்பது போந்தது. `சிவன் தவநிலை அந்நியமாயும், ஞான நிலை அந்நிய மாயும் நின்றான்` என அருளியவாறு ``மீட்டு`` என்பது, வினைமாற் றாய `மற்று` என்பதன் பொருட்டாய் நின்றது. ``வள்ளல்`` என்பதை முதலிற் கூட்டுக. `அருத்தி வைத்த வளமே பாடி` எனப் பிரிநிலை ஏகாரத்தை மாற்றிவைத்துரைக்க. நினைவு தோன்றாத வழிப் பாடுதல் தோன்றாமையால் ``பாடி`` எனவே, `நினைந்து` என்பதும் தானே பெறப்பட்டது. ``துருத்தியாய், திருந்தடி உளங்குளிர்ந்த போதெலாம் உகந்துகந் துரைப்பனே``l என ஆளுடைய பிள்ளையாரும் அருளிச்செய்தார். `மனம், மொழி, மெய்` என்பவற்றுள் மெய்யால் ஆவனவற்றை, கையால் ஆவனவாகவே கூறும் வழக்குப் பற்றி அவற்றை, ``கை வளம்`` என்றும், முப்பொறிகளாலும் வினை வரு மாயினும், வினை பெரும்பான்மை காய்த்தால் வருவனவாகவே கருதப் படுதலால் வினைவாராமையை, ``கைவளம் இன்றி`` எனவும் கூறினார். ``இன்றி`` எனப் பண்பின் நிலை பண்பின்மேல் ஏற்றப் பட்டது. அன்றி, `இன்றாக` எனத் திரிப்பினும் ஆம். இஃது ஈரடி எதுகை பெற்றது. `குறிலை யடுத்த யகர மெய் அசைக்கு ஐகாரம் எதுகையாய் வரும் என்க.இதனால், மோன சமாதியுற்றார்க்கு அவரது நினைப்பின் தன்மையால் வினை இன்றாமாறும் அதனால் பிறப்பின்றாமாறும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage