
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

தேவர்கள் ஓர்தீசை வந்துமண் ணோடுறும்
பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வராய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.
English Meaning:
Siva is the Primal One of Plural ThreeLaden with flower and water
The Celestial beings seek the earth
And sing the praise of the Pure One;
Whoever thinks of His bounteous Grace
Him He blesses,
He, the Primal One of the Three.
Tamil Meaning:
தேவர்கள் தத்தமக்கு வாய்ப்பான ஓரோர் இடத்தை அடைந்து நிலத்தல் நால்வகையாகத் தோன்றுகின்ற பூக்களையும், நீரையும் சுமந்து சென்று சிவனைத் திருவுருவங்களில் வழிபட்டு, அதனாலே மூவரில் ஓரோரொருவராயும், அவர் தவிர ஏனைத் தேவரில் ஓரொருவராயும் தலைமை பெற்ற அத்திருவருட் சிறப்பினை யறிந்து அவ்வாறு அவனை வழிபட வல்லார் யாவர்!Special Remark:
`அத்தன்மையோர் மிக அரியர்` என்றபடி, `திசை` என்பது `இடம்` என்னும் பொருட்டாய் நின்றது. நால்வகைப் பூக்களாவன - `கோட்டுப் பூ, கொடிப்பூ, நீர்ப்பு, புதர்ப்பூ` என்பன. இவை யாவும் நிலத்திலே தோன்றுதலின் அவை யாவும் அடங்க, `மண்ணோடுறும் பூ`` என்றார். ``மூவரிலும் பன்மையிலும் முதல்வராய்`` என்க. `பலர்` எனற்பாலதனை, ``பன்மை`` என எண்ணின்மேல் வைத்துக் கூறினார். ``நின்ற`` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.மேல், `உழைக்கொண்ட பூநீர்`` என்னும் மந்திரத்துள் `எல்லா நலங்களும் சிவ பூசையின் பயனேயாதலை விளக்குதற்குக் கூறிய அதனை, அஃதுணர்ந்து பயன் பெறுபவர் உலகத்து அரியர்` என்ப துணர்த்துதற்கு இங்குக் கூறினார் என்க. இதன் ஈற்றடி எதுகை பெறாது வந்தது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage