
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணந்தொழத்
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்த(து)ஓர்
பான்ஐங் குணனும் படைத்துநின் றானே.
English Meaning:
Lord is in Our HeartBathing Him in the five products of cow (Pancha Gavya)
The Celestial beings in hordes seek the Lord
Who knows end none;
Within the honeyed flower that is heart
His Grace stands revealed;
He who the five elements and their attributes created.
Tamil Meaning:
பசுவினின்றும் பெறப்படுகின்ற அரிய பொருள் ஐந்தினாலும் திருமுழுக்காட்டித் தேவர் கூட்டம் வழிபட, ஆதியும், அந்தமும் இல்லாதவனாகிய சிவனது திருவருள் அவர்கள் உள்ளங்களில் மலர்ந்த தாமரை மலரில் தோன்பேல வெளிப்பட்ட விளங்கிற்று. (அதனால் அவர்கள் பேரின்பம் பெற்றனர் என்றபடி.) இங்ஙனம் தன்னை வழிபட்டு உய்தற்காகவே ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகப் பத்து இந்திரியங்களையும் அவை செயற்படுதற்கு ஆற்றலைத் தருகின்ற தன்மாத்திரைகள் ஐந்தினையும் சிவன் உயிர்கட்குப் படைத்துக் கொடுத்தான்.Special Remark:
`அதனை உணர்ந்து அக்கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்` என்பதாம். பசுவினின்றும் பெறப்படும் அரும் பொருள் ஐந்தும், `பஞ்ச கௌவியம்` எனப்படும். அவை பால், தயிர், நெய் கோசலம், கோமயம் என்பன. இவை ஐந்தும் ஒன்றாகக் கலந்த பொழுதே `பஞ்ச கௌவியம்` எனப் பெயர்பெறும். அவற்றைக் கலத்தற்கு அளவுகள் உண்டு. கோசலம் - பசுவின் நீர். கோமயம் - சாணம். இவை தூய்மையின் பொருட்டு மிகச் சிறிதளவிலே சேர்க்கப் படும். இவற்றது சிறப்புணராது இக்காலத்துப் புத்தறிஞர் சிலர், இவற்றை நீக்கி, வெண்ணெய், மோர் இவற்றைக் கொள்ளல் வேண்டும்` என்பர். வெண்ணெய், நெய் இவற்றை வேறு வேறாகவும், தயிர், மோர் என்ப வற்றை வேறு வேறாகவும் வைத்து எண்ணிக்கை காட்டும் இவரது செயல் வியப்பிற்குரியதே. இவர்க்குச் சாத்திரமும் வேண்டா; சம்பிரதாயமும் வேண்டா ஆகலின் இழரைத் தெருட்டல் அரிது.\\\"இன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில்
நின்ற மலம் அனைத்து நீக்குவது\\\"l
என்பன முதலிய மெய்ம் மொழிகளை இவர்கட்குக் காட்டிப் பெருவதென்?
தனித்தனியாக ஆட்டும்பொழுது பால், தயிர், நெய் என்னும் மூன்றுமே ஆட்டப்படும். அவைகளை எவ்வளவும் ஆட்டலாம். அதனால் சிறிதளவே கொள்ளுதற்குரிய கோசல கோமயங்கள் தனித் தனியாக ஆட்டப்படா.\\\"ஓர் பான் ஐங்குணனும்\\\" என்பதை ஓர்பானும், ஐங்குணனும்` என்க. பூதங்களின் குணமாகிப் புலப்படுத்தல் பற்றித் தன்மாத்திரைகளை, `குணம்` என்றார்.
இதனால், சிவபூசையில் கொள்ளத்தக்க ஒன்று கூறப்பட்டது. சிவபூசை செய்த மானுடப் பிறப்பின் பயன் என்பதை இடம் வாய்த்துழி உடன் கூறினார்.
\\\"மானுடப் பிறவிதானும் வகுத்தது மனவாக்காயம்
ஆனிடத் தைந்தும் ஆடும் அரன்பணிக் காகஅன்றோ!
வானிடத் தவரும் மண்மேல் வந்தரன் றனைஅற் சிப்பர்;
ஊனெடுத் துழலும் ஊமர் ஒன்றையும் உணரார் அந்தோ\\\" 3
என்றது காண்க. இச்செய்யுளிலும்.
\\\"பாவமும் பழி பற்றற வேண்டுவீர்,
ஆவில் அஞ்சுகந் தாடும் அவன்கழல்
மேவ ராய்மிக வும்நினைந் துள்குமின்\\\" *
என்னும் திருமொழியிலும் `சிவன் ஆவிவ் அஞ்சினை உகந்து ஆடுபவன்` என்பது உணர்த்தப்பட்டது. அஃதே, \\\"ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்\\\" * என்று அருளிச்செய்யப் பட்டது. \\\"அரன் அஞ்சு ஆடுதல்\\\" என்பதை, `அரன் ஆடும் அஞ்சு` என மாற்றிப் பொருள் கொள்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage