ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை

பதிகங்கள்

Photo

மஞ்சனம் மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமுது ஆம்உப சாரம்எட் டெட்டொடும்
அஞ்சலி யோடும் கலந்தற்சித் தார்களே.

English Meaning:
Celestials Worship Lord with Archana
Why is it the Lord has taken His seat
In the heart of Beings Celestial
That consecrated water and garland of flowers bear?
With offerings five of dishes sweet
And with upachara rituals two times eight
They humbly prostrating, in archana, worship.
Tamil Meaning:
தத்துவங்களில் ஒவ்வொன்றன் எல்லை காறும் அவற்றிற்குத் தலைவராக வைத்துப் பலராலும் திருமஞ்சனம் ஆட்டித் திருமாலை சூட்டி வழிபடப்படும் கடவுளர்களது உள்ளங்களில் சிவன் நிலைபெற்று நின்று அவ்வழிபாட்டின் பயன்களை அவரவர்க்கு வழங்கி நிற்றற்குக் காரணம் அவரெல்லாம் முன்பு சிவனைப் பஞ்சாமிர்தம் முதலியவற்றால் அபிடேகித்துப் பதினாறு வகையான உபசாரங்களைச் செய்து, கைகூப்பிக் கும்பிட்டு மனம் பொருந்தி வழிபட்டார்கள் என்பதே.
Special Remark:
`என்பதே\' என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது. அங்ஙனம் வழிபடப்படுவார் பிரமன், விட்டுணு என்னும் காரணக் கடவுளரும், பிறரும் ஆவர்.
\"அயன்றனை யாதி யாக அரன்உரு என்ப தென்னை?
பயந்திடும் சத்தி யாதி பதிதலால்\"
என்னும் சிவஞான சித்தியை இங்கு உடன் நோக்குக. இங்குக் கூறப்பட்ட மஞ்னம், மாலை, அஞ்சமுது என்பன உபலக்கணம். அவற்றால் சிவபூசைக்கு வேண்டப்படும் பொருள்கள் குறிக்கப்பட்டன.
இதனால், சிவபூசையால் பெறப்படும் பயன்களுள் சிறப்புடையது ஒன்று எடுத்துக்கூறப்பட்டது. அதனானே `வழிபடப் படுபவன் சிவன் ஒருவனே\' என்பதும் `ஏனையோர் யாவரும் அவனை வழிபடுபவரே\' என்பதும் உடன் உணர்த்தப்பட்டன. வேதம், சிவன் ஒருவனையே \"விசுவ சேவியன்\" என்றும், \"தேயப் பொருள்\" என்றும் கூறும்.