
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் யாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.
English Meaning:
Prayer is True SacrificeTo Nandi of the spreading matted locks
That the sacrificial oblations takes,
We nothing offer;
The sacrifice that we morn and even can give
Are songs of praise that melt His heart;
Let us that sacrifice offer,
Verily, that is sacrifice, milk that is sweet.
Tamil Meaning:
வேள்வித் தீயில் சிவனை வழிபடுவோர் அவனை நோக்கி அத்தீயில் இடும் உணவை அவன் உண்டு மகிழ்வதாகவே கருதுகின்றனர். ஆயினும் அவர் கருத்தை அவன் உடன் பட்டு நின்றே அவர்கட்கு அருள் புரிகின்றான். இனி இலிங்கத்தில் அவனை வழிபடுவோர் அவ்விலிங்கத்தின் முன் வைத்துக் கையை அசைத்துக் காட்டுகின்ற பொருளை அவன் காணும் அளவிலே மகிழ்வதாகக் கருதுகின்றனர். அவர்கட்கும் அவர் கருத்தை உடன்பட்டே அவன் அருள் புரிகின்றான். அம்முறையில் அவனை உள்ளத்தலே உயிராகிய இலிங்கத்தில் வழிபடுகின்ற நாம் புறத்திலே வழிபடுவாரைப்போலப் பூசாகாலங்கலில் காட்டுதற்கு அங்கு எதனையுடையோம்? ஒன்றையும் உடையேமல்லோம். அதனால் அங்கு அவனுக்குக் காட்டும் உணவாவன அவனது திருவுள்ளத்தை மகிழ்விக்கின்ற தோத்திரப் பாடல்களே யாகும். அதனால் அந்த உணவையே அங்கு நாம் காட்டுவோம். அஃது உண்மையில் சொல் வடிவாகவே யிருப்பினும் நமது கருத்து வகையால் அவனுக்கு அது பாலடி சிலேயாய் மகிழ்ச்சியைத் தரும்.Special Remark:
`ஊட்டி மகிழ்வித்தலும், காட்டி மகிழ்வித்தலும், எனச்சிவனுக்கு உணவைத் தரும் முறை இரண்டு என்றற்கும், அவ்விரண்டில் எந்த முறையையும் அவன் உணவைப் படைப்பார் கருத்து நோக்கி அதற்கிசைந்து அருள்புரிதலன்றி அவரது செயலால் தன் குறை நிரம்புதல் பற்றி அருள்புரிகின்றிலன் என்றற்கும் வேள்வி செய்வாரது செயலினையும் இங்கு உடன் குறிப்பித்தார். உண்பிப் பாரது கருத்தை உடன் படுதலையே \\\"உண்ணும்\\\" என உபசரித்துக் கூறினார். ஞான நெறியினது சிறப்புணரமாட்டாதார் புறத்தே பொருள்களைக் கொண்டு செய்யும் வழிபாட்டினையே சிறந்ததாகக் கருதுவர் என்பது தோன்றச் சிவபிரானை, \\\"வேட்டவி உண்ணும் விரி சடை நந்தி\\\" எனவும், `அங்ஙனமாயினும் ஞானபூசையே சிறப் புடையது என்றற்கு, \\\"காலையும், மாலையும் ஊட்டு அவியாவன பாட்டு\\\" எனவும், `அதுவே அவனுக்கு மிக விருப்பத்தைத் தருவது` என்றற்கு, \\\"உள்ளம் குளிர்விக்கும் பாட்டு\\\" எனவும் கூறினார்.\\\"பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டினோமே\\\" *
என்று அருளிச் செய்ததும் காண்க.
\\\"வேட்ட\\\" என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `அவ்வவி காட்டுதும்` எனச் சுட்டு வருவித்து உரைக்க. \\\"காலையும், மாலையும்\\\" என்றதனால் காலை நேரம், மாலை நேரம் என்னும் இருநேரமாவது சிவபூசை செய்யத்தக்கது என்பது உணத்தப்பட்டது.
\\\"காலையும் மாலையும் கைதொழு வார்மனம்
ஆலையம் ஆரூர் அரனெறி யார்க்கே,\\\"*
என்று அருளிச் செய்தமை காண்க.
`நிவேதித்தல்` என்னும் வடசொற்குப் பொருள் `நன்றாக அறிவித்தல்` என்பது. அதுவே தமிழில் `காட்டுதல்` எனப்படுகின்றது
இதனால், ஞான பூசையின் இயல்பு மேற்கூறப்பட்டவற்றிற்கு மேல் இன்றியமையாது கூறற்பாலதொன்று கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage