
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்கரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே.
English Meaning:
Adoration is the Way to Reach LordThere is one way to reach Him
Adore Him with flowers many;
To them that do this,
The Lord by Himself stands revealed;
This the way to the Holy Feet of the three-eyed God;
Adoring Him thus, He fails never to stand before you.
Tamil Meaning:
`பயனுடைய செயலாவது இது` என அறியும் அறிவு ஒன்றே ஒன்றுதான் இவ்வுலகில் உள்ளது. அஃது யாதெனின், பலவகை மலர்களைத் தூவி வழிபட்டு, அதனால் விளையும் பயனை அறிந்து அதனையே மேலும் மேலும் செய்பவர்க்குச் சிவன் தானே பலகாலும் வலியவந்து அருள் செய்தலை அறிதலேயாகும். ஆகையால் அவ்வறிவின்வழி ஒழுகுவார்க்குச் சிவன் அவர் சொல்லியவாறெல்லாம் என்றும் எளிவந்து அருளுவன்.Special Remark:
அவ்வாறு அருளுதலை, பொதிசோறு சுமந்து வந்தளித்தமை, இரந்துவந்து சோறிட்டமை, வற்கடம் வருத்தாது படிக்காசு தந்தமை, காசி வாசி தீர்த்து வழங்கினமை, துணைவிபால் தூது சென்று ஊடல் தீர்த்தமை முதலிய பலவற்றிலும் வைத்து உணர்க.`பயனை அறியும் அறிவு` என்க பயன் தரும் செயலை, `பயன் என்றார் இரண்டாம் அடியின் இறுதியில் `அதனை யறிதல்` என்பது எஞ்சி நின்றது. ``அரன்`` என முன்னர்க் கூறினமையால், ``நயனங்கள் மூன்றுடையான்`` என்றது, `அவன்` என்னும் சுட்டளவாய் நின்றது. `வசனம்` என்பது `வயனம்` எனத் திரிந்தது.
இதனால், சிவன் தன்னை வழிபடுவார்க்கு இம்மையிலும் இனிதருள் செய்தல் கூறப்பட்டது.
``வேதன் நாரணன் ஆரணம் அறியா விழுப்பொருள்
பேதைபால்
தூதனாய் இருகால் நடந்திடு தோழன்
வன்மைசெய் தொண்டனுக்(கு)
ஆதலால் அடியார்களுக் கெளியான்
அடிக் கமலங்கள் நீ
காதலால் அணை; ஈண்டன வேண்டின
இம்மையே தரும கண்டிடே`` l
என அறிவுறுத்தினமை காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage