
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசை
பதிகங்கள்

பான்மொழி பாகன் பராபரன் றானாகும்
மான சதாசிவன் றன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆமே.
English Meaning:
Worship Sadasiva and Become SivaThe Lord that with His consort of sweet speech
Is the Para Supreme;
In Him enshrine Sadasiva
His upward looking Face as Isana consider
And thus worship perform
You shall Siva Himself become.
Tamil Meaning:
பெருமையுடைய சதாசிவ மூர்த்தி அருவுருவத் திருமேனியனாயினும் அவன் அருவருமுங் கடந்த பரசிவனே என்பது தேற்றம், ஆதலால் இலிங்க வழிபாட்டில் சதாசிவ மூர்த்தியையே முறைப்படி ஆவாகனம் முதலியன செய்து ஒருவன் வழிபடு வானாயின், அவன் சிவனாம் தன்மைப் பெரும் பயனைப் பெறுவான்.Special Remark:
`வடிவம் யாதும் இன்மையால் அசிந்திதனாய் உள்ள சிவன் ஆன்மாக்களின் பொருட்டு வடிவங்கொண்டே சிந்திதனாய் நிற்றலால் பரசிவனைச் சதாசிவனாகக் கொண்டே வழிபட்டுப் பயன்பெறுதலே முறை என்றற்கு, \\\"பராபரன் ஆகும் சதாசிவன் றன்னை\\\" என்றார். \\\"ஆவாகித்து\\\" என்றது உபலக்கணம் ஆதலின், `ஆவாகணம் முதலியவற்றைச் செய்து` என்றதாம். ஆவாகனம் முதலியவாவன ஆவாகனம், ஸ்தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், நியாசம், அர்க்கியம், பாத்தியம், ஆசமனம், அபிடேகம், அலங்காரம், தூபம், தீபமம், நைவேத்தியம், ஆராத்திரிகம், பிரதட்சிணம், நமஸ்காரம், தோத்திரம், பிரார்த்தனை என்பன. இவற்றின் இயல்பெல்லாம் பத்ததிகளிலும், சிவபூசா விதி நூல்களிலும் அறிக; இங்கு விரிப்பின் பெருகும்.\\\"மேன்முகம் ஈசானமாகவே கைக்கொண்டு\\\" என்றது, `மேல் சதாசிவலிங்கத்தின் இயல்பாகக் கூறியவற்றை அவ்வாறே உணர்ந்து செய்க` என அவற்றை இங்கு மீள நினைவுறுத்தியவாறு. `சீலம்` என்பது கடைக் குறைந்து, \\\"சீல்\\\" என நின்றது. சீலத்தை முகம் செய்தலாவது விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல்.
இம்மந்திரம் முதலாக வருவன எல்லாம் ஞானபூசை கிரியா பூசை இரண்டற்கும் பொதுவாவனவாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage