
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பதிகங்கள்

நேயத்தே நின்றிடும் நின்மலன் சத்தியோ(டு)
ஆய்அக் குடிலையுள் நாதம் அடைந்திட்டுப்
போய்அக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து வாக விளையுமே.
English Meaning:
Nadam and Bindu are Evolved when Siva Activates Pure Maya SaktiThe Immaculate One who in my heart dwells
The Kudilai (Pure Maya) Sakti He activates;
And from that act is Nadam born
That emanating Kala rays diverse
As seed the imperishable Bindu produces.
Tamil Meaning:
முழுதும் திருவருளிலே பொருந்தி நிற்கின்ற சுத்த சிவன் அந்தத் திருவருள் காரணமாகச் சத்தியோடு கூடிச் சத்தனாய் நின்று, பின்பு சுத்தமாயையுள் பொருந்தி முதற்கண் நாத தத்துவத்தைத் தோற்றுவித்து, அத்தத்துவம் பற்றுக்கோடாக சூக்குமை முதலிய நால்வகை வாக்குக்களையும், அந்த வாக்கு முதலிய அனைத்தையும் தம்முள் அடக்கி நிற்கும் சாந்தியதீதை முதலிய ஐந்து கலைகளையும் தோற்றுவித்துப் பின்பு விந்து தத்துவத்தைத் தோற்றுவித்த பின்னரே உலகம் முழுதும் முறைப்படி தோன்றும்.Special Remark:
`இங்ஙனமான அனைத்திற்கும் திருவருளே காரணம்` என்பது குறிப்பெச்சம். ``நேயம்`` என்றது திருவருளை. `சுத்த சிவன்` என்பார் ``நின்மலன்`` என்றார். அவன் சொரூப சிவன். அவனே உலகத்தை நோக்க விரும்பும்பொழுது சத்தியாலே நோக்குவன் ஆதலின், ``சத்தியோடு ஆய்`` என்றார். ``அடைந்திட்டு`` எனவும் ``புணர்ந்திட்டு`` எனவும் கூறினார். `விந்து தத்துவம் காரியமே யாயினும் பிற எல்லாவற்றிற்கும் அது காரணம்` என்பார். ``வீயத்தகா விந்து`` என்றார். வீதல் - அழிதல். விளைதலுக்கு `உலகம்` என்னும் வினைமுதல் வருவித்துக்கொள்க. `பல்வேறு வகைப்பட்ட உலகங் களின் பல்வேறு வகையான தோற்றமும், ஒடுக்கமும் திருவருள் காரணமாகவே நிகழும். என்றற்கு, உலகத் தோற்ற முறையைச் சிறிது வகுத்துக் கூறினார்.இதனால், திருவருளின் பெருமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage