
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பதிகங்கள்

தானே அழியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி யறியுங்கொல்
ஊனே யுருகி உணர்வை உணர்ந்தபின்
தேனே அனையன்நம் தேவர் பிரானே.
English Meaning:
Lord, of Himself, will Know YouHimself will know me,
When my Karmas perish;
I know not when; but Nandi will;
Do melt in piety
And reach divine Consciousness;
Sweet like honey is our Lord of Immortals.
Tamil Meaning:
முன் மந்திரத்திற் கூறியபடி ஆர்ந்தறிந்தார் அறிவை துணையாகச் சார்ந்தறிந்தமையால் உள்ளமேயன்றி உடம்பும் உருகுமாறு ஞானமே வடிவாய் நிற்கும். சிவமுதற்பொருளை உணர்ந்த பின் அம் முதல்வன் தேன்போல இனியனாய்த் தெவிட்டாது நின்றான். இந் நிலையில் சஞ்சித வினைகள் கெட்டொழிதலன்றி அவற்றிற்கு வேறு வழியில்லை. அங்ஙனம் அவை கெட்ட பின்பு யான் அவற்றை நுகர் வோனாதலும், சிவன் அவற்றை எனக்குக் கூட்டி நுகர்விப்போ னாதலும் ஆகிய நிலைமைகள் எங்ஙனம் உளவாகும்! உளவதால் இல்லை.Special Remark:
மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி யுரைக்க. தம்மியல் பால் தாம் அழியற்பாலனவாதல் பற்றி, ``தானே அழியும்`` என்றார். எனினும், `அவை பயனிலவாயினமை பற்றி முதல்வன் அழித் தொழிப்பன்` என்பதே கருத்து. `பக்குவம் எய்திய உயிரை அவைகளால் முன்னர்ச் செய்யப்பட்டுக் குவிந்து கிடந்த சஞ்சித வினைகள் சென்று பற்றமாட்டா` என்பதைத் திருவள்ளுவரும்,``சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்`` *
என அருளிச் செய்தார். உணர்வுடையதனை, உணர்வு என்றே உபசரித்தார். அது தேவர் பிரானேயாயினும், `மெய்ப்பொருளது `இயல்பு அது` என்றற்கு வேறு போலக் கூறினார்.
``தானே`` என்றது பன்மை யொருமை மயக்கம். பக்குவம் வந்த உயிர்களது சஞ்சித வினைகள் வாளா அழிக்கப்படுதல், துறவு பூண்டோர் சந்ததியும் இலராயின் அவர், முன்பு எழுதித் தந்த கடன் பத்திரம் அழிக்கப்படுதல் போல்வது என்க.
``யானேதும் பிறப்பஞ்சேன்; இறப்பதனுக் கென்கடவேன்!`` *
என்றதும் இந்நிலையில் நின்றேயாம்.
``எல்லைஇல் பிறவி நல்கும் இருவினை, எரிசேர் வித்தின்
ஒல்லையின் அகலும்``l
என்றது காண்க.
``நானே`` என்னும் ஏகாரம், `இன்றியமையாது அறியற் பாலன் யானே; பிறரல்லர்` என்பது உணர்த்தி நின்றது. `அங்ஙனமாக, நந்தி அரியுங்கொல்` என்க. ``கொல்``, இங்கு எதிர் மறைப் பொருட்டாய் நின்றது. ஊட்டுவித்தலும், உண்டலும் அறிந்தன்றி யாகாமையின் அவற்றை அறிதலின் மேல்வைத்துக் கூறினார்.
இதனால், திருவருட் பேற்றால் இன்பமாகிய பயன் விளைந்தபின் மீட்டும் துன்பம் இன்றாதல் கூறப்பட்டது. அதனால், இவ்வின்பம் நிலையான இன்பமாதல் விளங்கிற்று.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage