
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பதிகங்கள்

அகம்புகுந் தான்அடி யேற்கரு ளாலே
அகம்புகுந் தும்தெரி யான்அரு ளில்லோர்க்(கு)
அகம்புகுந் தானந்த மாக்கிச் சிவமாய்
அகம்புகுந் தால்நந்தி ஆனந்தி யாமே.
English Meaning:
Nandi entered my Heart and made me SivamIn my heart He entered, grace abounding;
Even if He is in there,
Those devoid of Grace know Him not;
Entering the heart,
He filled me with bliss;
As Sivam, he made me
As Nandi my heart entered,
And I blissful became.
Tamil Meaning:
சிவன் உயிர்களது அறிவினுள்ளே அருளை நிறைவித்து, அதனால் இன்பத்தைப் பெருக்கி விளக்கமுற்று நின்றால் இன்பப் பொருளாய் அனுபவப்படுவான். அதனால் அடியேனுக்கு அவன் அங்ஙனம் அருளை வழங்கினமையால் கருவிகளின் வழியாக அன்றி, நேரே தலைப்பட்டுணரும் பொருளாயினான். ஆகவே, அருள் வழங்கப் பெறாதாரது அறிவினுள்ளும் இருப்பினும் அவர்கட்கு அவன் அங்ஙனம் உணரும் பொருளாதல் இல்லை.Special Remark:
`அருளில்லார்க்குத் தெரியான்` என்றமையால், `அருள் பெற்ற எனக்குத் தெரிந்தான்` என்பது பெறப்பட்டது. அதனால் முதற்கண் ``புகுந்தான்`` என்றதற்கு, `புகுந்து தெரிந்தான்` என்பது பொருளாயிற்று.`நந்தி அகம்புகுந்து ஆனந்தமாக்கிச் சிவமாய் அகம்புகுந்தால் ஆனந்தியாம்; அதனால் அடியேற்கு அருளால் அகம்புகுந்து அருளில்லோர்க்கு அகம்புகுந்தும் தெரியான்` எனக் கொண்டு கூட்டி யுரைக்க.
`சிவம்` என்பதற்குப் பல பொருள் உண்டு, இங்கு அது `தூய தன்மை` என்னும் பொருட்டாய், `மறையாது விளங்கி நிற்பது` எனப் பொருள் தந்தது. எல்லா உயிர்களிலும் சிவன் கலந்திருப்பினும் உலகரது அறிவில் அவரவர் துணியும் பொருளாயும், சரியை முதலிய மூன்றில் நின்றார்க்கு உருவம், அருவுருவம், அருவம் என்னும் திரு மேனியனாயும், ஞானத்தில் கேள்வி முதலிய மூன்றில் நின்றார்க்கு ஆசிரியர் அறிவுறுத்த சொற்பொருள் அளவாயும் விளங்கி, நிட்டையில் நின்றார்க்கே தான் உண்மையாய் விளங்குவன். உண்மையாய் விளங்கும்பொழுதே இன்பமாய் விளைவான். அதனையே, ``நந்தி, அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கிச் சிவமாய் அகம் புந்தால் ஆனந்தியாம்`` என்றார். ஆகவே முன்னர் அகம்புகுதல் தொடக்கமும், பின்னர் அகம் புகுதல் முடிவும் ஆயின. புகுதல் புது வதன்றாயினும் விளங்குதல் புதிதாதல் பற்றி. ``புகுந்து`` எனவும், ``புகுந்தால்`` எனவும் கூறினார், ஆனந்தி - இன்ப வடிவினன். `முன்னை நிலை பெத்தம்` எனவும் `பின்னை நிலை முத்தி` எனவும் உணர்க.
இதனால், திருவருட் பேற்றின் முடிநிலை இயல்பு விளக்கப் பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage