
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு
பதிகங்கள்

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரும் ஆமே.
English Meaning:
God`s Grace Leads to illuminationIn the hint of His grace,
All universe shall be revealed to you;
When the darkness of ignorance lifts,
The Great One stands revealed;
When you seek Him,
Your swarming thoughts on Him centred,
You shall see the light of Jnana,
And thus immortal become.
Tamil Meaning:
முன் மந்திரத்திற் கூறியவாறு நிற்கும் நல்லக விளக்கை நோக்கும் நோக்கத்தால் முதற்கண் `யான்` என்றும், `எனது` என்றும் உயிர்மயங்குமாறு அதனோடு ஒற்றுமைப் பட்டு நின்ற உலகம், உண்மையில் அன்னவாகாது அதனின் வேறாய் அதன் அறிவினுள்ளே தோன்றும் அதன்பின் எல்லாவற்றிற்கும் தன்னையும், பிறரையுமே முதல்வராகக் கருதும் சீவபோதத்திற்குக் காரணமான மல இருள் நீங்க, `எல்லாம் அவனே` என்னும் சிவபோதம் நிலைத்து நிற்கும். அச்சிவபோதத்தின் வழிச் சிவனையே நாடுதல் ஒழிந்து மீட்டும் தனது அறிவாற்றலைப் பற்றாக நாடின், பெத்தான்மாக்களை அவர்களது அறிவிச்சை செயல்களைச் செயற்படுத்தி ஆள்கின்ற காரணக் கடவுளராம் நிலை எய்துவதாகும்.Special Remark:
`அந்நிலை எய்தும்படி சிந்தையை நாடச் செய்வது மலத்தின் வாசனை` என்பது கருத்து, எனவே, அவ்வாசனையும் நீங்கின் சிவானந்தானுபூதி உண்டாதல் பெறப்படும். `சிவானந்தானு பூதி நிலையே பரமுத்தி` எனவும், காரணக் கடவுளராய் நிற்றல் இலய போக அதிகார முத்திகள் எனவும் உணர்க.குறிப்பு: நோக்கு, அஃது அதிகார இயைபால் அகவிளக்கை நோக்கும் நோக்கின்மேல் நின்றது, ``குறிப்பினின்`` எனச் சிறுபான்மை `இன்` என் உருபு இன் சாரியை பெற்றது. வெறுப்பு இருளாவது உண்மைத் தலைவனை விரும்பாது விடுத்துத் தம் கள்ளத் தலைமையையே விரும்புதற்குக் காரணமாகிய அறியாமை. விகிர்தன் - உயிர்களின் இயல்பிற்கு வேறுபட்ட இயல்பினை உடையவன்; இறைவன். விகிர்தனது போதத்தை ``விகிர்தன்`` என உபசரித்தார். உம்மை, உயர்வு சிறப்பு. செறிப்புறு சிந்தை - சார்ந்த பொருள்தோறும் அது அதுவாய் அழுந்தி நிற்கின்ற ஆன்ம அறிவு. சிக்கென - உறுதியாக. `அறிவிப்பு` என்பது இடைக் குறைந்து ``அறிப்பு`` என நின்றது. அறிவித்தலையே கூறினாராயினும் இனம் பற்றி இச் சிறப்பித்தலும், செய்வித்தலும் கொள்ளப்படும். காரணக் கடவுள ராவார்க்கு அவர் செய்த புண்ணியத்தானே ஆன்மாக்களது அறி விச்சை செயல்ளைச் செயற்படுத்தும் ஆற்றலைச் சிவன் அளித் தருள்வன் என்க. பரமுத்தியை விரும்புவோர் இதனை விரும்பாமையை,
``ஐந்தொழிலும் காரணர்க ளாத்தொழிலும் போகம்நுகர்
வெந்தொழிலும் மேவார் மிக`` *
என்பதனான் அறிக.
இதனால் திருவருட் பேற்றினை முற்றப் பெறவே மேலோருள் மேலோர் விரும்புதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage