
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
பதிகங்கள்

நீரும் நிலனும் விசும்பு அங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியுமாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே.
English Meaning:
He is DeathlessWater, earth, sky, fire and wind,
The spark of light within the body,
—All these He is;
He is Paraparam, He is Siva, Our Lord,
He is the walking Jiva here below,
Deathless He is.
Tamil Meaning:
எங்கள் சிவன் ஐம்பூதங்களுடன், `ஒளி` எனத் தக்க மற்றும் முப்பொருள்கள் கூட எடடுப் பொருள்களாகிய வடிவினை உடையவன், `பராபரன் பிஞ்ஞகன்` என்பன போன்ற பெயர்களால் புகழப்படுபவன், எல்லா இடங்களும் அவனுக்கு இடங்களே எல்லாவற்றிற்கும் இறுதியாயினும் தனக்கு இறுதியில்லாதவன். அவனை யான் வாழ்த்துகின்றேன்.Special Remark:
இறுதியிற்கூறியது குறிப்பெச்சம். சோதி - ஒளி. ஞாயிறும், திங்களும் ஒளிப் பொருள்களாதல் வெளிப்படை. இனி அறிவும் ஒளியாதலின் அவ்வாற்றால் `ஒளி` என்பது ஆன்மாவையும் குறித்தது. ஆக அட்ட மூர்த்தமும் சொல்லப்பட்டமை காண்க. பராபரன் - மேலோடு கீழாய் விரிந்தவன். பிஞ்ஞகன் - தலைக் கோலத்தை உடையவன். தலையில் உலகம் அழியாதபடி கங்கையைத் தாங்கினவன்; பாம்பையும், நிலவையும் பகையின்றி ஒன்றி வாழ அணிந்தவன்; தலைமாலைகளை அணிந்து தனது நித்தியத்தை உணர்த் துபவன்; பிரணவத்தைக் குறிக்கும் கொன்றை மலர் மாலையைத் திருஅடையாளமாலையாக அணிந்தவன். குரண்டாசுரனை அழித்துக் கொண்ட கொக்கிறகை அணிந்து, கொடியோரை ஒறுத்தலை உணர்த் துபவன்; இன்னோரன்ன பல புகழ்கள் `பிஞ்ஞகன்` என்பதனால் பெறப்படுதல் அறிக. தூரும் உடம்பு - சோற்றால் தூர்க்கப்படும் உடம்பு; அதனுள் சோதி உயிர். ``சோதியும்`` என்னும் உம்மையால் ஏனை ஒளியும் தழுவப்பட்டன. ``பேரும்`` என்னும் உம்மை சிறப்பு. ஊர் - இடம். சகலன் - எல்லாம் ஆனவன். ஈற்றடி, கால இட வரையறைகள் இன்மையைக் குறித்தது.இது நூற்பொருள் கூறியதன்று. நூற்கும், தமக்கும் முதல்வனாகிய இறைவனை வாழ்த்தியது. `வாழ்த்து, வணக்கம்` என்பவற்றுடன் பொருளியல்புரைத்தலும் வாழ்த்தாதலை உணர்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage