
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
பதிகங்கள்

பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்
தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட் டிகலிட மெல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்குரையாமே.
English Meaning:
His Infinite Compassion For JivaHe is the Light within the Lights Three—
Sun, Moon and Fire;
He is their Body too
He the Lord of Celestials;
Yet leaving luminosities,
He follows Jivas in expanses vast
In compassion great;
He the One as several proliferates.
Tamil Meaning:
`கதிர், மதி, தீ` என்னும் பெருஞ்சுடர் மூன்றையும் அவை உலகிற்குப் பயன்படுவ ஆதலைத்தெரிந்து, தனக்கு உடம்பாகக்கொண்டு அந்த ஒளிப்பொருட்கட்கு ஒளியைத் தருகின்ற உள்ளொளியாய் அவற்றில் நிறைந்து நிற்கின்ற சிவனும் வியாபகப் பொருளாகிய ஆன்மாக்கள் ஒன்றுக்கொன்று மாறுபட அடையும் நிலைகளில் எல்லாம் தான் அருள் கூர்ந்து அவற்றின் அறிவுக்கு அறிவாய், அவற்றோடு உடனாய்ப் பலவாகின்றான்.Special Remark:
தெரிந்து உள்ளொளியாகி எனவும், `இகலிடம் எல்லாம் பரிந்து, இருஞ்சுடர் விட்டு உடன்போகின்ற பல்குரையாமே`` எனவும் இயைக்க. இகல் இடம் பெத்தமும் முத்தியும். ``பிரானும்`` என்னும் உம்மை எதிர்வருகின்ற `உயிர்` என்னும் பொருளைத் தழுவிநின்றது. பல உயிர்களிலும் நிறைந்து நிற்றல் பற்றி இறைவன், ``அநேகன்``1 எனப்படுதல் காண்க.``பல்கு உரை`` என்பதில், `சொல்` எனப் பொருள் தரும் `உரை` என்பது அதனால் குறிக்கப்படும் பொருளைக் குறித்தது. பொருள், இங்கு உயிர். இனி, `பல் + குரை` என்றே பிரித்து, `குரை அசைநிலை இடைச்சொல்` என்றலுமாம். ``அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே``2 என்பது போலும் சங்க இலக்கியங்களில் மட்டுமன்றி, ``நல்குர வென்னும் நசையின்மை பல்குரைத் துன்பங்கள் சென்று படும்``3 எனத் திருக்குறளிலும் `குரை` என்னும் இடைச்சொல் ஆளப்பட்டமை காண்க. `பல் கோரை என்றே பாடம் ஓதித் தாம் தாம் வேண்டுமாறேயும் உரைப்பர்.
இதனால், சிவன் தனது சருவ வியாபகத்தால் பல உயிர்களோடும் உடனாய் நிற்றல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage