
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்
பதிகங்கள்

பற்றினுள் ளேபர மாய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி
நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரும்
மற்றவ னாய்நின்ற மாதவன் தானே.
English Meaning:
He is the Spark of Jnana in AjnaHe is the Divine Spark
Inside desires stands;
He is the Divine Spark,
Into the Three Lights—Sun, Moon and Fire-waxes,
He is the Divine Spark,
In the Fore-head Centre as our Thought seated,
The Tapasvins great, too, like Him stand.
Tamil Meaning:
பற்றப்படும் பொருள்களில் எல்லாம் மேலான பொருளாய், மேலான ஒளியாயும் உள்ள சிவன் அண்டம் முழுதும் நிறைந்து, `கதிர், மதி, தீ` என்னும் முச்சுடர்களாய்ப் புலப்படுவான். பிண்டத்தில் புருவ நடுவிலே தியானிக்கப்படும் பொருளாய் நிலைத் திருப்பான். பின்னும் அவ்வாறு தியானிப்போனும் தானேயாகின்ற தவ வடிவினனும் ஆவான்.Special Remark:
முதற்கண், ``பற்று`` என்றது, பற்றப்படும் பொருளை. பற்றப்படும் பொருள் நற்பொருளும், விடப்படும் பொருள் தீப் பொருளும் ஆதலை நினைக. `அத்தைகய பொருள்களுள் மேலானவன்` எனவே, அவனின் மிக்க நன்றாம் பொருள் இல்லை யாயிற்று. நன்மையே, வடமொழியில் `சிவம்` எனப்படுகின்றது. நன்மையை உடையது` என்பது அதன் பொருள். சுடர் - ஒளி. அஃது ஆகுபெயராய், அதனை உடையானைக் குறித்தது. ``முளைக்கின்ற மூன்றொளி`` என்றதனால், ``முற்றும்`` என்றது அண்டத்தைப் பற்றியதாயிற்று. உம்மை முற்றும்மை. முற்றுதல் - நிறைதல். நெற்றி - ஆஞ்ஞை. இதுவே தியானத்தானம் ஆதலை யறிக. நினைவு - தியானம்; என்றது தியானிக்கப்படும் பொருளை. மூன்று ஒளியாய்ப் புலப்படும் நிலை மாறி மாறி நிகழ்வது. தியானிக்கப்படும் பொருளாதல் ஒன்றேயாகலின், ``நிலைதரும்`` எனவும், `தியானமும் அவன் உடனாகாத விடத்து நிகழாது` என்றற்கு ``அவனாய் நின்ற`` என்றும், அவன் தியானமுமாய்க் கலந்து நிற்றல் பற்றி ``மாதவன்`` என்றும் கூறினார். தான்ஏ அசைகள்.இதனால் சிவன் அண்டத்திலும், பிண்டத்திலும் வியாபியாய், ஏற்ற பெற்றியில் அருள்புரியுமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage