
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
பதிகங்கள்

அத்திசைக் குள்ளே அமர்ந்தன ஆறங்கம்
அத்திசைக் குள்ளே அமர்ந்தன நால்வேதம்
அத்திசைக் குள்ளே அமர்ந்த சரியையோடு
அத்திசைக் குள்ளே அமர்ந்த சமயமே.
English Meaning:
When Sakti further evolvesIn that Space thus opened up
The Six Vedangas took their place;
In that Space thus opened up
The Four Vedas took their place;
In that Space thus opened up
The Four Paths beginning with Chariya
Took their place;
In that Space thus opened up
The Saiva Truth the Four Paths comprehended
Took its place.
Tamil Meaning:
பத்துத் திசைகளாய் அமைந்த அந்த உலகத்துள்ளே தான் வேதங்களின் ஆறு அங்கங்களும், அந்த அங்கங்கட்கு முதலாகிய நான்கு வேதங்களும், அந்த வேதங்களின் பொருளைச் சரியை முதலிய நான்கு பாதங்களாய் நின்று தெளிய உணர்த்துகின்ற சிவாகமங்களும் பொருந்தி நிற்கின்றன.Special Remark:
``திசை`` என்றதனால் அவற்றை உடைய உலகம் பொருளுலகமாதல் விளங்கும். ஆறங்கம் முதலியன சொல்லுலகம் ஆதல் வெளிப்படை. எனவே உலகம் இங்ஙனம் இருவகைத்தாதல் விளங்கும். இவை முறையே `அத்தப் பிரபஞ்சம், சத்தப் பிரபஞ்சம்` என வடமொழியில் சொல்லப்படும். `முன்னர்க் கூறிய உலகத்துள் பின்னர்க் கூறிய உலகம் விளங்குகின்றது` என்றதனால் அதனையும் சிவனே சத்தி வாயிலாகத் தோற்றுவித்தல் பெறப்பட்டது.கீழ் நின்றும் கூறும் முறையால் ஆறங்கம் முதற்கண் கூறப் பட்டன. அவையாவை `சிட்சை, வியாகரணம், கற்பம், நிருத்தம், சோதிடம், சந்தோ விசிதி` - என்பன.
அவற்றுள் சிட்சை வேத மந்திரங்களை உச்சரிக்கும் முறையை விளக்கும். வியாகரணம் - வேத மொழிகளின் இலக்கணத்தைக் கூறும். நிருத்தம் - வேத மொழிபற்றிய பல விளக்கங்களைத் தரும். சோதிடம் - வேதத்திற் சொல்லப்பட்ட கருமங்களை இயற்றுதற்குரிய கால வகைகளைக் கூறும். கற்பம் - சூத்திர வடிவில் அமைந்து வேதத்தில் சொல்லப்பட்ட கருமங்களைச் செய்யும் முறைகளை விவரிக்கும். அவை ஆசுவலாயனர், போதாயனர், ஆபத்தம்பர் முதலிய முனி வர்களால் செய்யப்பட்டன. சந்தோவிசிதி - வேத மந்திரங்களுக்கு எழுத்துக் கணக்கில் சொல்லப்படுகின்ற சந்த வகைகளை விளக்கும். இவை வேதங்களை நன்கு உணர்தற்குக் கருவி நூல்கள் ஆகையால் இவற்றை உணராவிடில் வேதங்களால் பயனடைய இயலாது.
`சரியையாதியோடு கூடிய சமயம் அத்திசைக்குள்ளே அமர்ந்தன` என்க. இடை நின்ற சில பதங்கள் தொகுத்தலாயின, ``சமயம்`` என்றது தலைமை பற்றிச் சைவத்தின் மேல் நின்று. ஆகு பெயராய் அதனை உணர்த்தும் ஆகமங்களைக் குறித்தன. `அவ் ஆகமங்களில் சொல்லப்பட்ட சரியை முதலிய நான்கும் மேற்கூறிய உலகத்திலே நிகழ்வன` என்பதை ``அத்திசைக்குள்ளே அமர்ந்த சரியையோடு`` என உடம்பொடு புணர்த்து ஓதினார்.
இதனால், சதாசிவமே மேற்கூறிய பொருளுலகம் போலச் சொல்லுலகங்களையும் தோற்றுவித்து உயிர்கட்குப் பயன்பட வைத்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage