
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்
பதிகங்கள்

வேதா நெடுமால் உருத்திரன் மேல்ஈசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே.
English Meaning:
Sadasiva comprehends all Nine God-FormsBrahma, Vishnu, Rudra, Mahesa,
And the Five-faced Lord above,
Bindu, Nada, Sakti Primal, and Siva
—All these are but Sadasiva in general.
Tamil Meaning:
சதாசிவந்தானே கீழ் நின்று ஒடுக்க முறையில் மேல் நோக்கி எண்ணப்படுகின்ற `அயன், மால், உருத்திரன், மகேசுரன்` என்னும் நால்வராயும், தனக்குமேல் முறையே நிற்கும் `விந்து, நாதம், சத்தி, சிவம்` என்னும் நால்வராயும் இருக்கும். அதனால் அனைத்து மூர்த்தங்கட்கும் இது பொது மூர்த்தமாகும்.Special Remark:
ஆகவே, சதாசிவ மூர்த்தத்தை வழிபடவே சிவபேதம் அனைத்தையும் வழிபட்டதாம் என்பது பெறப்பட்டது.சிவபேதம் ஒன்பது. அவை `நவந்தரு பேதம்` எனப்படும். அவை அனைத்தும் இம்மந்திரத்துட் கூறப்பட்டமை காண்க.
விந்துவும், நாதமும், `விந்து, பரவிந்து - நாதம், பரநாதம்` எனத் தனித்தனி இரண்டாகும். அவற்றுள் சில இடங்களில் பரவிந்து பரநாதங்களை, `சத்தி, சிவம்` என்றும், சில இடங்களில் விந்து நாதங்களை, `சத்தி, சிவம்` என்றும் கூறும் வழக்கம் சிவாகமங்களில் உள்ளது. இங்குப் பரவிந்து பரநாதங்களே அவ்வாறு கூறப்பட்டன.
சதாசிவத்திற்கு மேல் உள்ள நான்கும் அருவம். கீழ் உள்ள நான்கும் உருவம். நடுவில் உள்ள சதாசிவம் அருவுருவம், அருவம், உருவம் என்னும் இருதன்மையையும் உடைமையால் சதாசிவ மூர்த்தம் அனைத்து மூர்த்தமாயும் உள்ளது. இஃதே பற்றிச் சேக்கிழார் நாயனார்,
``காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்``
-தி.12 சாக்கிய நாயனார் 8
என அருளிச் செய்தார். சாதாரணம் - பொது.
இதனால், சதாசிவ லிங்கமே அனைத்து லிங்கமும் ஆதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage