
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
பதிகங்கள்

தானும் அழிந்து தனமும் அழிந்து
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்தபின்
நானும் அழிந்தமை நானறி யேனே.
English Meaning:
Nature of Union in GodMyself perishing, my wealth perishing,
Body perishing and life perishing,
Heaven perishing and mind perishing,
My ego perishing
—This I knew not (is union in God).
Tamil Meaning:
நான் மோன சமாதியில் மூழ்கிவிட்டபொழுது, எனக்கு அந்த நிலையை வருவித்த குருவும் தோன்றவில்லை. அவர் அளித்தருளிய செல்வமாகிய ஞானமும் தோன்றவில்லை. அவரால் தூய்மை செய்யப்பட்ட உடம்பும் தோன்றவில்லை. அந்த உடம்பை ஆட்டிப் படைத்த உயிரும் தோன்றவில்லை. அந்த உடம்போடு கூடி நான் இருந்த இடமும் தோன்றவில்லை. உடம்பிற்கு உள்ளும், வெளியுமாய் அலைந்து கொண்டிருந்த மனமும் தோன்றவில்லை. அந்த மனத்திற்குமேல் அதன் செயலை ஆராய்ந்து நின்ற அகங்காரம் புத்தி சித்தங்களும் தோன்றவில்லை. கடைசியாக, `நான், நான்` என்று என்னால் `சொல்லப்பட்டும் உணரப்பட்டும் வந்த அந்த ஆன்மாவும் தோன்றவில்லை. இவையனைத்தும் தோன்றாமல் எப்படி எங்கே மறைந்துவிட்டன என்பது தனக்குத் தெரியவில்லை.Special Remark:
`அழிந்தன` என்றது, புலனாகாமை பற்றியேயாம். ஏனெனில், அந்தச் சமாதி நிலையினின்றும் பிரிந்த வழி இவ்வாறு சொல்லும் சொற்கள் நிகழ்தலானும், அழிந்தவை மீள இவ்வாறு நின்று சொல் நிகழ்த்தா ஆகலானும் என்க.`இவையெல்லாம் முன்னர்த் தோன்றினமை வெறும் கற்பனையே யாகலின், கற்பனை கழியவே அவையும் தோன்றுதல் இலவாயின. ஆகவே, ``அழிந்தன`` என்றது `அழிந்தன` என்று கூறியதேயாம்` என்பாரும் உளர்.
``பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி``
எனவும்,
``அண்டங்கள் ஏழும் கடந்தகன் றப்பாலும்
உண்டென்ற பேரொளிக் குள்ளே உளஒளி``
எனவும், மற்றும் இன்னோரன்னவாக மேலெல்லாம் கூறிவந்த நாயனார்க்கும் அது கருத்தாகாமை யறிக.
``உயிர்`` என்றது, உடம்பை இயக்கிநிற்கும் நிலையை. ``வான்`` என்பது இடத்தைக் குறித்தது. மனத்தைக் கூறவே, இனம் பற்றி ஏனை அந்தக் கரணங்களும் கொள்ளப்பட்டன. ``நான்`` என்றது ஆன்மாத் தன்னைப் பதி பாசங்களின் வேறாக அறிந்து நின்ற நிலையை. `நான்` என்பது அழிந்தபின் பிற அழிந்தவாற்றை அந்த `நான்` எனப்பட்டது எங்ஙனம் அறிதல் கூடும்? கூடாமையின், ``நான் அறியேன்`` என்றார். ``அழிந்து`` என்னும் எச்சங்கள் எண்ணின்கண் வந்தன. உம்மைகள் எண்ணும்மைகள்.
இதனால், `மோன சமாதி எய்தினோர் மது உண்ட வண்டு, அந்த மது மயக்கத்திலே தன்னையும் அறியாது கிடத்தல்போல சிவா னந்தத்தை நுகர்ந்து அந்த நுகர்ச்சியில் தம்மையும் மறந்திருப்பார்கள்` என்பது கூறப்பட்டது.
``ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட்டென் உள்ளமும்போய்,
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ``8
என்னும் திருவாசகத்தை இங்கு ஒப்பு நோக்குக.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage