
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
பதிகங்கள்

ஆலிங் கனம்செய்து அகம்சுடச் சூலத்துச்
சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோலிங் கமைந்தபின் கூபப் பறவைகள்
மாலிங்கு வைத்தது முன்பின் வழியே.
English Meaning:
Body Invaded by IndriyasEmbracing in warmth and pregnancy developing,
They made this body and (the couple) left;
The body-pole thus erected;
The bewitching Birds of Deep well invaded;
This way was it made, through lives successive.
Tamil Meaning:
உலகத்தில் ஒருவனும், ஒருத்தியும் ஒருவரை ஒருவர் இறுகத் தழுவுமாற்றால் `அவளது வயிற்றிற்றானே அங்குள்ள தீயால் வெந்து உருவாகி நிலைப்பதாகிய மண் பாண்டத்தைக் கருவிலே அமைத்து, அதற்கு எந்தத் தன்னுரிமையும் இல்லாமற் செய்து விடுகின்றார்கள். பின்பு அது வெளியில் வந்த பிறகு அதற்கு வளர்ச்சி முறை அமைகின்றது. அப்பொழுது கிணற்றுப் பறவைகள் போல் வெளியுலகைப் பற்றி யாதும் அறியாத மக்கள் அந்தப் பாண்டத்திற்கு அமைத்து வைக்கும் நெறி, முன்பே பலமுறை அமைந்துகிடந்த மயக்க நெறியே யன்றிப் புதிய தெளிவு நெறி யாதுமன்று.Special Remark:
அந்நெறியாவது, உருவாவதும், உடைந்து போவதும் - பின்னும் உருவாவதும், உடைந்து போவதுந்தான். `செய்து, அமைத்து, கவிர்த்தனர்` என்பவற்றிற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது. ``அகம்`` என்றது வயிற்றை. ``சுட`` என்றதனால் அதற்குரிய `தீ` என்பது வருவிக்கப்பட்டது. அஃதாவது உடல் வெப்பம். சூல் - கருப்பம். அத்து, வேண்டா வழிச் சாரியையாய் வந்து, ஏழாவதன் பொருளைத் தோற்றுவித்தது. சால் - மண் பாண்டம்; என்றது உடம்பையேயாதல் வெளிப்படை. உடம்பை மண்பாண்டமாக வருணித்தல் சித்தர் பாடல்களில் பல இடங்களில் காணலாம். உடம்பில் உயிர் உள்ளதேனும் அது தன்னியல்பை இழந்து, உடம்பின் இயல்பாயே நிற்றலின் அதனைக் குறியாது உடம்பையே குறித்தார். தலைமை தன்னுரிமை. அஃதாவது, உள்ளே முடங்கிக் கிடவாது வெளி வர விரும்பினும் அது மாட்டாமை. ``தலைமை தவிர்த்தனர்`` என்பது `அடைத்து வைத்தார்கள்` என்றவாறு. கோல், ஒழுங்கு. வெளியுலகம், வீட்டு நெறி. மால் மயக்கம், `மால் வழியே` என இயையும். ``முன்பின்`` என்பதில், `இன்`, சாரியை. `முன்பு உள்ள நெறியே` என்க. அது பிறந்தும், இறந்தும் மீளப் பிறந்தும், இறந்து வருதலாம். எனவே, முன் மந்திரத்திற் கூறியவாறு. `இவ்வுலகிற்றானே நீடு வாழ நினைவாரது நிலைமையெல்லாம் இவ்வாறே முடியும்` என்பதாம்.இதனால், முன் மந்திரத்தில், `ஆலயம் ஆமே` எனப் பொதுவாகச் சுட்டிய நிலையாமை இனிது விளங்க உணர்த்தப்பட்டது. ஆகவே, இவ்விரு மந்திரங்கலாலும், `உலக வாழ்க்கையை விடுத்து, மோன சமாதியையே பெரியோர் அடைவர்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டதாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage