
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
பதிகங்கள்

முகத்தினிற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தினிற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத்தன் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தினைச் சொல்லெனில் சொல்லுமா றெங்ஙனே.
English Meaning:
Divine felicity Beyond WordsThou fools who see with fleshy eyes
Know! To see with inner eye is bliss true;
How can mother tell the daughter
Of the felicity in the union with her husband?
In what terms will she that describe?
Tamil Meaning:
இதன் பொருள் வெளிப்படை.Special Remark:
பின்னிரண்டடிகளை முதற்கண் கூட்டி, ஈற்றில் தொக்கு நின்ற `அச்சுகம், மகள் தன் மணாளனோடு ஆடிக் காணத்தக்கதே` என்னும் இசையெச்சத்தை விரித்து, `ஆனந்தம் சுகத்தில் கண்கொண்டு காண்பதே` என மாற்றியுரைத்து முடிக்க. முதல் அடி, இடைப்பிற வரலாய் வந்தது. இஃது எடுத்துக்காட்டுவமை.காண்பதே - காணப்படுவதே. ஆனந்தம், ஏற்புழிக் கோடலால் இங்குச் சிவானந்தமே யாதல் தெளிவு. முகத்தினிற் கண்ணை `ஊனக் கண்` என்றும், அகத்தினிற் கண்ணை, `ஞானக் கண்` என்றும் வழங்குப. `தசையைக் குறிப்பதாகிய `ஊ` என்னும் பெயர், புணர்ச்சிக்கண் னகரச் சாரியை பெற்று, ஊன என வரும்` என்பது தொல்காப்பியம்.8 பிற்காலத்தி அஃது, `ஊன்` என னகர ஈறேயாய்ச் சில இடங்களில் அகரச் சாரியை பெற்று வருவதாயிற்று. அகக் கண்ணால் காண வேண்டுவதை முகக் கண்ணால் காண முயலுதலும், அகக்கண்ணிற்கு அஃது அகப்படாமை பற்றி, `அஃது இல்லை` என முரணி நிற்றலும் உடைமை பற்றி அத்தன்மையுடையாரை ``மூடர்காள்`` என விளித்தருளினால். இம்மந்திரத்துட் கூறப் பட்ட பொருளையே திருவுந்தியார்,
``இங்ஙன் இருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்?
அங்ஙனம் இருந்ததென் றுந்தீபற;
அறியும் அறிவதன் றுந்தீபற``3
என்றும், திருக்களிற்றுப்படியார்,
``அன்று முதல் ஆரேனும் ஆளாய் உடனாகிச்
சென்றவர்க்கும் இன்னதெனச் சென்றதில்லை - இன்றிதனை,
இவ்வா றிருந்ததென் றெவ்வண்ணம் சொல்லுகேன்?
அவ்வா றிருந்த தது``l
என்றும் கூறின.
இதனால், சிவானந்த அனுபவம் மோன (மௌன) சமாதி நிலையேயன்றி, மனோ வாக்குக்களின் செயற்பாட்டு நிலையன்று` என்பது வலியுறுத்திக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage