
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
பதிகங்கள்

வாடா மலர்புணை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுட ருட்சென்று
நாடா அமுதுற நாடார் அமுதமே.
English Meaning:
The Celestials Seek Him NotHis Holy Feet bedecked in unfading blooms
The Celestials seek not;
To the Holy Way they take not;
To the radiance of the lovely lotus within,
They penetrate not,
They seek not to drink of the Divine Ambrosia.
Tamil Meaning:
தேவர்கள் இருவினைகளும் நல்வினையால் விளைந்த இன்பத்திலே மூழ்கிக் கிடத்தலால் அவர்கள் சிவனது திருவடியின்பத்தை நாடுதல் இல்லை. அவ்வாறே பெருமை நிறைந்த உள்ளக் கமலத்தில் ஒளிரும் ஒளி விளக்காகிய சிவனை அடைந்து, அவன் அருளால் தானே விளையும் அமுதத்தை உண்ணவும் அவர்கள் விரும்புதல் இல்லை. (ஆயினும் தாங்கள் அமுதத்தை உண்டு வாழ்வதாகவே அவர்கள் கருதுகின்றார்கள்.) அவர்கள் உண்ணும் அமுதம் அமுதமாகமோ? (ஆகாது.)Special Remark:
`அமிர்தம்` என்பதற்கு `மிருத்யுவை (மரணத்தை) ஒழிப்பது` என்பது பொருள். அதனால் அமிர்தத்தை உண்பவர்கள் `அமரர்` (`மரித்தல் இல்லாதவர்`) எனப்படுகின்றனர். ஆயினும் அவர்கள் என்றுமே இறப்பதில்லையோ? தங்கள் நல்வினை முடிந்த வுடன் மாறி, வேறு பிறப்பை அடைவர். ஆதலால், அவர்கள் உண்ணும் உணவை `அமிர்தம்` என்றலும், அதனை உண்ணும் அவர்களை `அமரர்` என்றலும் உபசார வார்த்தைகளேயன்றி உண்மையாவன அல்ல. இதனை,``அச்சுதன், அயன், அமரர் ஆகிய பெயர் அவர்க்கு
நிச்சயம்படு முகமனே யானபோல்``3
என்னும் கந்த புராணச் செய்யுளாலும் அறியலாம். இக்கருத்து பற்றியே` `தேவர் உண்ணும் அமுதம் அமுதமோ` என்றார். ``அமுதமே`` என்னும் ஏகாரம், எதிர்மறைப் பொருட்டாகிய வினாப்பொருட்டு. `அவர் உண்ணும் அமுதம்` என்னும் இசையும்.
சிவனை அடைந்தோரே இறப்பின் நீங்கினோர் ஆவர் ஆதலால், அவனது திருவடியின்பமே உண்மை அமுதமாகும். அஃது உள்ளத்துள்ளே இயல்பாக என்றும் உள்ளதேயாதல் பற்றி அதனை ``நாடா (தேட வேண்டாத) என்றார். `சென்று உற நாடார்` என இயைக்க. உறுதல் - பொருந்துதல். சேடு - பெருமை.
கற்பக மலர்க்கு வாட்டம் இன்மையால், ``வாடா மலர் புனை வானவர்`` என்றார். `இத்தகைய மலரைச் சூடுதல் பற்றியும் அவர்க்கு ஒரு செருக்கு உள்ளது` என்பதைக் குறித்தபடி. ``சேவடி`` என்பதை, இரண்டாம் அடியின் முதற்கண் வைத்து, `வானவர், அறப் பயனாம் இன்பம் நாள்தோறும் உறுதலால் சேவடி நாடார்` என்க. ``நெறி`` என்றது முன்னர் அதனின் நின்ற ஒழுக்கத்தையும், பின்பு அதன் பயனையும் குறித்து நின்றது. `அறப் பயன் இன்பம் சுவர்க்க இன்பமே` என்பதும், `அது நிலையற்றதாகலின் இன்பம் ஆகாது என்பதும்` கூறியவாறு. ``கொன்றைத் தொங்கலான் அடியவர்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே``1 என்றார் ஆளுடைய பிள்ளையார்,
``பசித்துண்டு பின்னும் பசிப்பானை யொக்கும்
இசைத்து வருவினையில் இன்பம்``2
என்பது சிவஞான போதம், `சுவர்க்க இன்ப மயக்கத்தால் தேவர் சிவனை நாடுதல் இல்லை` என்றருளிச்செய்த இக்கருத்தே, பற்றி
``தேவர் கனாவிலும் கண்டறியாச்செம்மலர்ப் பாதங்கள்``3
என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார்.
தேவர்களது செருக்கைக் கூறிய இதனால், மக்கள் செருக்குச் சிவனை நாட ஒட்டாகையை உணர்த்தி, `உலகியல் மயக்கம் அற்றோர்க்கே மோன சமாதி கூடும்` என்பது உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage