
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி
பதிகங்கள்

மறப்பது வாய்நின்ற மாயநன் நாடன்
பிறப்பினை நீக்கிய பேரரு ளாளன்
சிறப்புடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்(து) உறங்கிடுந் தானே.
English Meaning:
Siva and Sakti are in Samadhi UnionEven in my forgtfulness He stands,
He is Lord of Maya-Land,
He is the Compassion vast,
He ended my birth,
He is of qualities great;
Himself and His Holy Sakti
Sleep in sleepless union.
Tamil Meaning:
தன்னை மறப்பதையே தனது தொழிலாகக் கொண்ட, வஞ்சக நாட்டில் வாழும் ஒருவன் (பெத்தான்மா) அம் மறதியால் அடைவது பிறவித் துன்பமே. அத்துன்பத்தை, அவன் தன்னை என்றும் மறவா நிலையை அடைவிக்கும் முகத்தால் நீங்கி யருளிய பெருங்கருணையாளன், எவ்வாற்றானும் பிறப்பை எய்தாத சிறப்புடையவன். (சிவன்) அவன், பிறவித் துன்பத்தின் நீங்கிய அவன் (முத்தான்மா) முன்போலத் தன்னை மறப்பதாகிய அந்த உறக்கம் அல்லாத வேறு உறக்க இன்பத்தில் இருக்கும்பொழுது, தானும் தன் தேவியுடன் அந்த உறக்கத்தில் பங்கு பற்றியிருப்பான்.Special Remark:
`கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று நிலைகளில் கேவல நிலையே மறப்பும். சகலம் நினைப்புமாயினும் அந்நினைப்பு நிலையிலும் சிவனை நினைத்தல் இல்லையாகலின், பெத்தான்மாவை ``மறப்பே வடிவமாய் நின்றவன்`` என்றார். அது, பகுதிப் பொருள் விகுதி.``நின்னை எப்போதும் நினைய லொட்டாய் நீ;
நினையப்புகின்
பின்னை அப்போதே மறப்பித்துப்
பேர்த்தொன்று நாடுவித்தி;
உன்னை எப்போதும் மறந்திட்டு
உனக்கு இனிதாய் இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ? சொல்லு
வாழி இறைவனே``3
என்னும் அப்பர் திருமொழி இங்கு நினைக்கத்தக்கது. மாயம் - வஞ்சனையும், நிலையாமையும். அவற்றை உடைய மாயா காரியங்களாகிய தத்துவங்கள். மறதியைத் தருதல் பற்றி வஞ்சனையையே இங்குப் பொருளாகக் கொள்க. அவை உயிர்க்கு இடமாதல் பற்றி, `நாடு` என்றும், கேவலத்தை நீக்குதல் பற்றி `நன்று` என்றுங் கூறினார். சுத்த நிலையே சிவனை மறவா நிலையும், அதனால் பிறவியற்றிருக்கும் நிலையுமாகும். `நாடனது` என ஆறாவது விரிக்க. சிவபோக நிலை, சிவனை மறந்து துயிலும் கேவல சகல அதீதங்கள் போலாது சிவனை நினைந்தே துயிலும் சுத்த அதீதம் ஆகலின் அதனை, ``உறக்கம் இல் போகம்`` என்றும், `அந்நிலையிலும் சிவனது திருவருள் உதவி ஆன்மாவிற்கு இன்றியமையாதது` என்றற்கு. ``திருமங்கையும் தானுமாய் (அப்போகத்தில்) தான் உறங்கிடும்`` என்றும் கூறினார். `சிவ போக நிலையிலும் சிவனது திருவருள் உதவி ஆன்மாவிற்கு இன்றியமையாதது` என்பதைச் சிவஞான போதப் பதினொன்றாம் சூத்திரத்து நுண்பொருள் பற்றி உணர்க.
ஈற்றில் நின்ற ``தான்`` என்பதை, ``சிறப்புடையான்` என்பதன் பின்னர்க்கூட்டி, `மங்கையும், தானுமாய்` என ஆக்கம் விரித்துரைக்க.
இதனால், `சுத்த துரியாதீதமே மோன சமாதி நிலை` என்பதும், `அந்நிலையும் சிவனது அருளாலே பயன்படும்` என்பதும் உணர்த்தப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage