
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்
பதிகங்கள்

ஆன சமயம் அது இதுநன் றெனும்
மான மனிதர் மயக்க மதுவொழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த உருவது வாமே.
English Meaning:
God is Beyond All ReligionsThis the right path, that the right path
Be not tossed in such frail human doubts;
Seek the Being that is beyond wilderness of doubts
His is the Form that is flawless.
Tamil Meaning:
`அதுவே பொருத்தமான சமயம், இதுவே நன்றான சமயம்` என ஓரோர் காரணம் பற்றிப் பற்றுக் கொண்டு பிதற்றுகின்ற மக்களது பிதற்றலால் உண்டாகின்ற மயக்கம் உம்மை விட்டு நீங்க, நீவிர் நாதம் கடந்த கடவுளாகிய சிவனை நினையுங்கள்; ஏனெனில், அந்த நினைவே குற்றமற்ற வகைமையைத் தருவதாம்.Special Remark:
மானம் - அபிமானம். `மாயம்` என்பது பாடமன்று. ``மனிதர் மயக்கம்`` என்னும் ஆறாவதன் தொகை `வாளது வெட்டு` என்பதுபோல நின்றது. ``மயக்கமது`` என்னும் அது, பகுதிப்பொருள் விகுதி. `ஒழிய` என்பதன் ஈற்று அகரம் குறைந்து நின்றது. அன்றி வினைத்தொகை யாக்கி, `ஒழிக்கின்ற கடவுளை` எனலுமாம். ``கானம்`` என்னும் இசையின் பெயர் சொல்லொற்றுமையால் நாத தத்துவத்தைக் குறித்தது. ``உரு`` என்பது `வண்ணம்` என்னும் பொருட் டன்மையை உணர்த்திற்று. உருவைத் தருவதனை ``உரு`` என்றார்.இதனால், புறச்சமயிகள் தம்மில் ஒற்றுமையிலாராய் மாறுபட்டுப் பலதலைப்பட்ட கருத்துக்களைக் கூறிமக்களை அலைக்கழிப்பவராதல் கூறப்பட்டது.
``தம்மை - உணரார்; உடங்கியைந்து தம்மிற்
புணராமை கேளாம் புறன்`` 1
என்றார் சிவஞான போதத்திலும்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage