
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்
பதிகங்கள்

அண்ணலை நாடிய ஆறு சமயரும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முண்ணின் றழியும் முயற்றில ராதலின்
மண்ணின் றொழியும் வகைஅறி யார்களே.
English Meaning:
The Six Faiths Sought not Freedom from PasasThey of the Six Faiths sought Lord
Only for heavenly state to gain;
They sought not to be rid of bondage thorns,
And so know not to be rid of this world`s materiality.
Tamil Meaning:
சிவபிரானை இகழாது போற்றுகின்ற அகச் சமயங்கள் ஆறிலும் நிற்போர் அவ்வச்சமயக் கடவுளரது உலகத்தை அடைந்து இன்புற்றிருக்க, புறச் சமயிகள் அவற்றை விடுவித்துப் பிற விண்ணுலகங்களை அடைதலை மிகவும் விரும்பி, வினைக்கட்டி னின்றும் வெளிப்படமாட்டாது, அதனுள் நின்றே அழிகின்ற அவச் செயலாதலால், அவர்கள் பிரகிருதிக்கு மேல் செல்லும் வழியை அறியாதவர்களேயாவர்.Special Remark:
`ஆறு சமயமும்` என்பது இரட்டுற மொழிதலாய், `வேறு விண்ணவர் ஆக` எனப்பொருள் தந்து, ``மிகவும் விரும்பியே`` என்பத னோடும் இயைந்தது. ``முள்`` என்றது முட்புதரை. `வினையைக் காடாக உருவகித்துக் கூறலும் மரபு` என்பது, ``நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் ... ... ... 2 என இதனுட் பின் வருதலும், ``இருவினை மாமரம்``3 என்றமையும் போல்வன பற்றி உணர்க. முயற்று - முயற்சி; என்றது தவத்தை யாகலின், `அதனை யிலர்` என்றது. அவச்செயலை உடையாராதலைக் குறித்தது. ``மண்`` என்றது அது முதல் பிரகிருதிகாறும் உள்ள தத்துவங்கட்கு உபலக்கணமாய், அவ்வத் தத்துவ புவனங்களின் மேல் நின்றது.அகச்சமயம் ஆறாவன:- பாசுபதம், மாவிரதம், வைரவம்` சாத்தம். காணாபதீயம், கௌமாரம் என்பன. காபாலமும், காளா முகமும், பாசுபதம், மாவிரதம் என்பவற்றுள்ளே அடங்கும். `சாத்தம்` என்றது சுத்த சாத்தத்தையே; வாம மதத்தையன்று. இம்மதங்களில் நிற்போர் சிவதீக்கை பெறுதலில்லையாயினும், உருத்திரன் முதலி யோரைச் சிவனது மூர்த்தி பேதங்களாகக்கருதி வழிபடுதலும், சிவனைத் தேவருள் ஒருவனாக வைத்து இகழ்தல் இன்மையும் உடைய ராகலின். இவரை ``அண்ணலை நாடியசமயர்`` என்றும், இவர் பிர கிருதிக்கு மேல் உள்ள சீகண்ட வுருத்திரர் முதலிய உருத்திரலோகங் களை அடைவர் ஆகலின் பிறரை ``மண்ணின் றொழியும் வகையறி வார்களாய், விண்ணவராவர்`` என்றும் அருளிச் செய்தார். இவருள் பாசுபதர் மதம் முதலியவற்றையே பொதுமையில் `சைவம்` என வைத்து, `சைவம், வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்` எனச் சமயங்கள் ஆறு என்பாரும் உளராயினர். சைவத்தை நீக்கி, `சௌமியம்` என்பது கூட்டி, `ஆறு` என்பாரும் ஒருசாரார்.
`உலகாயதர் விண்ணவராக விரும்புதல் இன்மையின்` அங்ஙனம் விரும்புபவராகக் கூறியது புத்தர் முதலிய பிறரையேயாம். அவரெல்லாம் தாம் தாம் ஓர் உலகத்தை முத்தியுலகமாகக் கற்பித்துக் கொண்டு அவற்றின்கண் செல்ல விரும்பினாராயினும், அவர் அடைவது பிரகிருதிக்குக் கீழ் உள்ள தத்துவ புவனங்களையே என்பது நாயனாரது திருவுள்ளமாதலின் அவரை, `மண்ணின்றொழியும் வகையறியாதவர்` என்று அருளிச்செய்தார்.
இதனால், புறச்சமயங்கள் பிரகிருதியைக் கடப்பிக்க மாட்டாமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage