
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்
பதிகங்கள்

ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே.
English Meaning:
God is Beyond All Formal FaithsThey founded the Six Faiths,
Yet they found Him not;
What the Six Faiths talk of is not He;
Do you yourself in faith seek Him,
And be resolved of doubts all;
And then sure shall you enter your Father`s Mansion.
Tamil Meaning:
புறச்சமயங்கள் ஆறனையும் தோற்றுவித்தவர்கள் மெய்ப் பொருளைக்கண்டு அதனைப் பிறருங் காணவழி கூறினா ரல்லர். அதனால் சிவன் அந்த ஆறுசமயப்பொருளில் ஒன்றேனும் ஆயிற்றிலன். இந்த உண்மையை, உலகீர், தெளிமின்கள்! நன்கு தெளி மின்கள்!! தெளிந்தீர்களாயின், அதன்பின் தவற்றின் நீங்கி, நேர் வழியை அடைந்து, வீடு பெறுதல் கூடும்.Special Remark:
``சமயம்`` என்றது இங்குப் புறச் சமயத்தையே யாதல் வெளிப்படை. காணுதல் - உணர்தல். அதுபின் பிறர்க்கு உணர்த்தி யதனைக் குறித்தது. இனி, ``சமயம்`` என்றதனை ஆகுபெயராக்கி, `அவற்றை உணர்ந்தும்நூலை ஆக்கியவர்` என்று உரைப்பினும் ஆம். இச் சமயத்தவரும். இவர்தம் நூல்களும் பசுக்களும், பசு வாக்கியங் களும் ஆதலின், அவராலும் அவர்தம் நூலாலும் மெய்ப்பொருள் பற்றப்படாதாயிற்று.``இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை
நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணம்
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வோடும்
அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன`` 2
எனவும்,
``சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கிஓர் பேய்த்தேர்ப்பின்
குடங்கொண்டு நீர்க்குச்செல்வார்`` 1
எனவும் போந்த திருவாக்குகளும் புறச்சமயங்கள் மயக்க உரைக ளாதலை விளக்குதல் காண்க.
``அவன்`` என்றது, மேல், ``எம் இறை`` என்றதனைச் சுட்டிற்று. ``தேறித் தெளிமின்`` என்றது ஒருபொருட் பன்மொழி மறித்தும் இவ்வாறு கூறியது வற்புறுத்தற் பொருட்டு. மாறுதல் - நெறியின் நீங்குதல். `அஃது இன்றி` எனவே, நேர்வழியைப் பற்றுதல் பெறப்பட்டது. `வீடு` என்பது இல்லத்திற்கும் பெயராய் வழங்குதலின், அச் சொல் நயம் பற்றி ``மனைபுகலாமே`` என்றார். `வழி தவறிச் சென்று காடு மேடுகளில் அலையாமல், நேர்வழியைக் கண்டு, அதன் வழி விரைவில் இல்லத்தை அடைந்து இன்பறலாம்` என்பது நயம். இங்கு, ``அவன் அலன்`` என்று, சிவமாய் விளங்காமையை ஆதலின், ``அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய்`` 2என்றாற் போல்வன இதனொடு மாறுகொள்ளாமை அறிக.
இதனால், புறச் சமயங்கள் வீடாகிய பேரின்பத்தைப் பயவாமையே யன்றிப் பிறவியாகிய பெருந்துன்பத்தை மிகுவித்தல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage