
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்
பதிகங்கள்

மயங்குகின் றாரும் மதிதெளிந் தாரை
முயங்கி இருவினை மூழை முகப்பா
இயங்கப் பெறுவரேல் ஈறது காட்டில்
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி ஆமே.
English Meaning:
To Attain the Supreme GoalThose who are assailed by doubts
And those who are freed from doubts
When together commingle,
Drive the wild beasts of Karma twain to caves,
And persevere in the pursuit
Then shall the Supreme Goal be reached
They that are rid of the terrors of the wild
Shall see the Path that to Para leads.
Tamil Meaning:
புறச் சமயங்களில் நின்று அறிவு மயங்குகின்றவர் களும் சைவசமயத்தை அடைந்து அறிவு தெளிந்தவர்கள்பால் சென்று கூடி, இருவினைப்பயன்கள் அகப்பையால் முகக்கும் அளவில், உடலூழாய்க் கழியும்படி ஒழுக வல்லவராயின், அவர்கட்கு அவ்வுடல் வாழ்க்கை முடிகின்ற நிலை தோன்றும்பொழுது யம பயம் இல்லாது ஒழிய, ஒப்பற்ற பரமுத்தி நிலை கிடைக்கும்.Special Remark:
``மயங்குகின்றாரும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு `தெளிந்தாரும்` என்பது பாடமன்று. மூழை - அகப்பை. மூழை முகப் பதாவது உணவை முகக்கின்ற அகப்பை அதனை முகந்தொழிதல் அல்லது உண்ணுதல் இன்றி வாளா புறத்தே ஊற்றிவிடுதல் போல இருவினைகளின் பயனாகிய இன்பத்துன்பங்களை விருப்பு வெறுப் பின்றி உடலூழாக்கிக் கழியவிடுதல். இந்நிலை திருவருள் நெறியில் நிற்பார்க்கல்லது கூடாமையானும், திருவருள் நெறி சைவ சமயத்தில் அல்லது இல்லாமையானும் `புறச் சமயத்தவர் சைவ சமயிகள்பால் பகை பாராட்டாது நட்புக்கொண்டு பழகுவாராயின், பேரின்பமாகிய நலத்தைப் பெறுவர்` என்றார்.``நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்
கினத்தியல்ப தாகும் அறிவு`` 1
எனவும்,
``கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர்`` 2
எனவும் கூறப்படுதல் அறியத்தக்கது. ``காட்டில்`` என்பது `தோன்றில்` எனத் தன் தன்வினையாய் நின்றது. ``கெட்டு`` என்பதனை, `கெட` எனத் திரிக்க. ``அவர்க்கு`` என்பதனை, ``பெறுவரேல்`` என்பதன் பின்னர்க் கூட்டி உரைக்க. ``ஈறது... ... ஆமே`` என்பதற்குப் பிறவாறும் உரைப்ப.
இதனால், புறச் சமயத்தவரும் சைவ சமயிகளை அடையின் பயன் பெறுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage