
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்
பதிகங்கள்

அம்பர நாதன் அகலிட நீள்பொழில்
தன்பர மல்லது தாம் `அறியோம்` என்பர்
உம்பருள் வானவர் தானவர் கண்டிலர்
எம்பெரு மான்அருள் பெற்றிருந் தாரே.
English Meaning:
By Grace He Can Be SeenHe is the Lord of Heavens,
By the vast spatial glades surrounded;
Except Him we know Param (supreme) none;
Of the Celestials, Vanavas and Danavas,
None have seen Him ever;
Only those who received His Grace
Have seen Him forever.
Tamil Meaning:
மக்கள் நிலவுலகத்துள்ளாராயினும் அவர்கள் எங்கள் சிவபெருமானது திருவருளைப் பெற்றிருக்கின்றார்கள் ஆகையால், அவர்கள், `அகன்ற இடத்தையுடைய அனைத் துலகங்களும் சிதம்பர நாதன் ஆகிய அவனது ஆணைவழியல்லது பிறவாற்றால் நடத்தலைத் தாங்கள் அறியவில்லை` என்று கூறுகின் றார்கள். அஃதாவது, `அவன் அன்றி ஓர் அணுவும் அசைதலைக் காணவில்லை` என்கின்றார்கள். தேவரும் மக்களுக்கு மேலிடத்துள் ளாராயினும் இந்த உண்மையை அவர்கள் உணர்ந்திலர்.Special Remark:
`காரணம், அவர்கள் எம்பெருமான் அருள் பெறாமை` என்பதாம்.``கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி!
நனவிலும் நாயேற் கருளினை போற்றி!``
``தேவர் கனாவிலும் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள்``
``புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாளும்
போக்குகின் றோம் அவமே; இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கி ... ... [திருமாலாம்
அவன்விருப் பெய்தவும், மலரவன் ஆசைப்
படவும் நின் அலர்ந்தமெய்க் கருணையும், நீயும்
அவனியிற் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்``3
என்னும் திருமொழிகளும் இக்கருத்தே பற்றி எழுந்தன.
மக்கள், `யாம் மானுடர்; சிவன் கடவுளர். ஆகவே அவன் நமக்கு அருள்புரிதல் வேண்டும்` என்னும் எண்ணத்தைப் பொதுவாக உடையவர். அதனால், அவர்களில் முயற்சியுடையோர் அவனது அருளைப் பெறுகின்றனர். தேவர், `நாமும் தேவர், சிவனும் தேவர்` என்னும் எண்ணத்தைப் பொதுவாக உடையர். அதனால் அவர்களுள் அவன் அருள் பெறுபவர் அரியர் ஆகின்றனர். சிலர் பெற நினைப்பினும் தாழ்வெனும் தன்மை வருதற்பொருட்டு மண்ணுலகில் வந்து வழிபட்டே சிவன் அருளைப் பெறுகின்றனர்.
``வானிடத் தவரும் மண்மேல்
வந்து அரன்றனை அற்சிப்பர்;
ஊனெடுத் துழலும் ஊமர்
ஒன்றையும் உணரார் அந்தோ``9
என்னும் சாத்திர மொழியைக் காண்க.
``அகலிடநீள் பொழில்`` என்பதை முதலிற்கொள்க. அம்பரம் சிறப்புப் பற்றி, சிதம்பரத்தைக் குறித்தது. `தாம் என்பர்` என இயையும். உம்பர் - மேலிடம். ``உம்பர்`` என்றதனால், `இம்பர்` என்பது பெறப்பட்டது. மூன்றாம் அடியை இறுதியிற் கூட்டுக. இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், `சிவன் அருள் பெறாதார் சிவனது மேற்கூறிய இயல்பை உணர்தல் இயலாது` என்பது கூறப்பட்டது. `அதனாலே ஞான குருவின் பெருமையையும் அவர்கள் அறியார்` என்பதாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage