
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்
பதிகங்கள்

தோன்ற அறிதலும் தோன்றல்தோன் றாமையும்
மான்ற அறிவும் மறிநன வாதிகள்
மூன்றவை நீங்கும் துரியங்கள் மூன்(று)அற
ஊன்றிய நந்தி உயர்மோனத் தானே.
English Meaning:
God is in the Silence of PerceptionTo perceive the things that appear,
To perceive the things that appear not,
That is Knowledge Higher;
To perceive the things in ways different
As in waking, dreaming and rest of states,
—These three perceptions will there be not,
In the State the Three Turiyas transcended;
There Nandi stands firm, is Silence Exalted.
Tamil Meaning:
தோன்ற அறிதல் - பொருள்களை இனிது விளங்கத் தெளிய உணர்தல். தோன்றல் தோன்றாமை - விளங்கவும் விளங்காமலும் ஐயமாக உணர்தல். மான்ற அறிவு - யாதும் அறியாது அறிவு மூடமாதல். இவையே மறித்து மறித்து வரும் நனவு கனவு உறக்கங்களாம். இம்மூன்றும் நீங்கிய நான்காம் நிலை துரியம் அது மூன்று வகையாய் நிகழும். (அவை முன் தந்திரத்தில், `முத்துரியம்` என்பதில் காட்டப்பட்டன. அம்மூன்று துரியங்களும் நீங்க, ஐந்தாவதாகிய அதீதத்தில் ஞான குருவை உணர்பவன் (மேற்கூறியவாறு கருடோகம் பாவனை செய்பவன் கருடனே யாதல் போலக்) குருவேயாகிவிடுவான்.Special Remark:
`மலம் நீங்கிய முத்தனாய் விடுவான்` என்பதாம். நந்தி நிலையை யடைந்தவனையே ``நந்தி`` என்றார். ``உயர் மோனந்தான்`` என்றது `ஞானகுரு` என்னும் பொருட்டாய் நின்றது.இதனால், `துரிய பாவனை முதிர, அதீதபாவனையால் பாவகன் பாவிக்கப்படும் பொருளாகிவிடுவான்` என, மேல், ``சிவன் அவன் ஆம்`` எனக் கூறியது மெய்ம்மையாதல் விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage