
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
பதிகங்கள்

ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன் றின்புறு காலத்துத்
தீர வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.
English Meaning:
They Think Not of Heavenly PleasuresArdour of mind, ever fresh youth, and endearment of heart
These considering good,
They in pleasure indulged,
And in acts of love diverse sported;
Lo! They forgot the heavenly bliss
The Lord bestows
And for ever, for ever missed it.
Tamil Meaning:
யாவரிடத்தும் நட்பையே பாராட்டும் மனமும், எச் செயலிலும் சோர்வடையாத ஊக்கமும், கிளைஞர் எல்லோரிடத்திலும் செல்லுகின்ற ஈரமும் குறைவின்றியிருத்தலால் தாமும், பிறரும் `இது மிக நல்லதாகிய பருவம்` என மகிழ்ச்சியுறுவதாகிய இளமைப் பருவத்திலே அந்நல்லவற்றை யெல்லாம் உமையொருபாகனுக்குப் பணி செய்வதில் பயன்படுத்தாது, அவனது இன்பத்தைப் பெறாமல் மறந்து, அந்நல்லனவெல்லாம் விரையக் கெடுதற்கு ஏதுவாகிய சிற்றின்பச் செயலிலே சிலர் ஈடுபட்டு ஒழிகின்றார்களே; ஈதென்ன அறியாமை!Special Remark:
`ஈதென்ன அறியாமை` என்பது குறிப்பெச்சம். `இன்புறு காலம் இளமைக் காலமே` என்பது தோன்ற முன்னரே ஊக்கத்தினை, அதனைத் தருகின்ற இளமையாக உபசரித்துக் கூறினார். ஆர்வம் - பேரன்பு. `அது நட்பைத் தரும்` என்பதனை,அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு. -திருக்குறள், 74
என்பதனால் அறிக. `மக்கள் மனம் அவரது இளமைக் காலத்திலே தூயதாகவே இருந்து, நாள் செல்லச் செல்ல உலகச் சூழலில் படிந்து படிந்து மாசேறிவிடுகின்றது` என்பது பொதுவான ஓர் உலக வழக்கு. அஃதே பற்றி இளமைப் பருவத்தை ``நல்ல என்று இன்புறுகாலம்`` என்றார். ஈற்றடி முதலில், `உமாதவன்` என வரற்பாலதாகிய உகரம் தொடைநோக்கி, மூன்றாம் அடியின் இறுதிக்கண் வகையுளியாய் நின்றது. ``நின்று மறந்தொழிந்தார்களே`` என்றலே கருத்தென்க. ஈற்றடி உயிரெதுகை.
இதனால் கனியிருக்கக் காய் கவர்ந்து கெடுதல் போல்வதோர் மயக்கம் நோக்கி இறங்கியவாறு.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage