
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்
பதிகங்கள்

கடன்கொண்டு நெற்குற்றுக் கையரை ஊட்டி
உடம்பினை யோம்பி உயிராய்த் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண் டுடலார் கிடக்கின்ற வாறே.
English Meaning:
They Care Not for Soul`s Well-BeingThey borrow grain;
They pound it hard,
Feed the base (senses),
And nourish the body;
Thus they wander
Their lives to live;
But in the valley broad
A prey to raging flames
The body finally lieth;
This they realize not.
Tamil Meaning:
நெல்லைக் கடனாகவேனும் வாங்கிக் குற்றி, குற்றிய அரிசியைக் கொண்டு ஒரு சாண் வயிற்றினுள் இருக்கும் சிறு கருவி களின் வேகத்தைத் தணிக்கும் முகத்தால் உடம்பைப் பாது காக்கின்றவர்களும் தங்களை `உயிர்` என்று சொல்லிக்கொண்டு திரி கின்றார்கள். அவ்வாறு திரிகின்றவர் தம்மைப்போன்றோர் பலரது உடம்புகளும் முடிவில், மலைச்சாரலில் பற்றி எரிகின்ற தீப்போன்ற பெரிய தீயை உடைய முருட்டணையில் ஏறிப் பின் அதினின்றும் இறங் காமல் அதனையே இடமாகக்கொண்டு கிடந்து ஒழிந்துபோதலைப் பல முறை கண்டிருந்தும் அதனைச் சிறிதும் பொருட்படுத்துதல் இல்லை.Special Remark:
இவரை, `உயிர்` என்று கூறுதல் எவ்வாறு பொருந்தும் என்பது குறிப்பெச்சம். ``உயிரா`` என்பது பாடமாயின், `உயிர்த்து`, அஃதாவது `மூச்சுவிட்டுச் சீவித்து` என உரைக்க. இறுதியில், `அறியார்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றது. கடனாகவும், என்னும் ஆக்கச் சொல்லும், உம்மையும் தொகுத்தலாயின. குற்று, `குறு` என்பது அடியாக வந்த வினையெச்சம். அவ்வெச்சம் இக்காலத்தில் `குற்றி` என வழங்குகின்றது. குறுதல் - உரலில் இட்டு உலக்கையால் குற்றுதல். குத்துதல் - கையை முட்டியாகப் பிடித்துக் குத்துதல். இவ் வேறுபாடு உணரத் தக்கது. கை - சிறுமை. கையர், உடலார் - என்பன இழிவு நோக்கி உயர்திணையாகக் கூறப்பட்டன.இது ``நாடாமை, நாணின்மை, நாரின்மை, யாதொன்றும் பேணாமை`` என்னும் பேதையார் தொழில்களில் நாடாமை நோக்கி இரங்கியவாறு.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage