
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
பதிகங்கள்

அந்தமும் ஈறும் முதலா னவைஅற
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் மூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருட மானதே.
English Meaning:
Mystic Moon Sphere VisionedFor the birth and death to end
The finite position is for the Sixteen (Visuddhi) and
Two (Ajna) to reach
And so when Kundalini that was at base
Ascends and crosses beyond the third centre from it (Anahatha)
Then is visioned the Mystic Sphere of the Moon.
Tamil Meaning:
உடலெழுத்துக்களில் கவர்க்கமாதி ஐவருக்கத்தின் ஈற்றெழுத்துக்களும், யகாராதி சகாராதி (‹) வருக்கங்களின் ஈற்றெழுத்துக்களும் அவ்வவ் வருக்கத்தின் முதலெழுத்துக்களோடு கூடி அனாகத சக்கரத்தோடே நீங்கி யொழிய, விசுத்தி, ஆஞ்ஞை என்னும் இறுதி இரண்டாதாரங்களிலே உயிரெழுத்துப் பதினாறனோடு மற்றிரண்டெழுத்துக் கூடப் பதினெட்டெழுத்தே நிற்றலால், எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய பரசிவனும் ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பன்னிரண்டு எழுத்துக் கடந்து நிற்பவனாகவே எண்ணப்படுகின்றான். அதனால், யோகத்தின் முடிவும் சந்திர மண்டலத்தையும் கடந்து துவாதசாந்தத்தை அடைவதே யாகின்றது.Special Remark:
`முதலானவற்றொடு` என உருபு விரிக்க. முன்னை மந்திரத்தில் `எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்`` என்றதனானே, ``அப்பதினெட்டு`` எனப்பட்டவை எழுத்துக்களாதல் பெறப்பட்டது. இறுதி ``அந்தம்`` இரண்டு முறையே சிவனையும், யோகத்தின் முடிவை யும் உணர்த்தின. பன்னிரண்டைக் கடந்தவனை, பதின் மூன்றாவதில் நிற்பவனாகக்கூறினார். கை - பக்கம்; இடம். நாத காரியமாவன் ஐம்ப தெழுத்துக்களாக, அவற்றுட் சிலவற்றானே ஏரொளிச் சக்கரம் அமை யும் என்றது என்னை? என்னும் ஐயத்தினை, முன்னிரண்டடிகளால் காரணங் காட்டி அறுத்தருளினார். பதின்மூன்றாந் தானமே துவாத சாந்தம்; அங்கே உள்ள பரவெளியே பரசிவன் விளங்கும் இடம்.``ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற`` 1
என்றார் திருவுந்தியாரிலும். பதின்மூன்றாந் தானத்தில் நிற்றலை எடுத்தோதியது பன்னிரண்டு எழுத்துக்களைக் கடந்தவனாக எண்ணப் படுதலை உணர்த்தற்கு. ஈற்றடியால். ஆதார யோகத்தோடு நின்றொழி யாது, நிராதாரத்தின்வழி மீதானத்துச் செல்லுதலின் இன்றியமை யாமையைக் குறித்தார்.
இதனால், இவ்வதிகாரத்தின் கண்ணது, ஓர் ஐயம் அறுக்கப் பட்டது. முதற்றொட்டு இதுகாறும் வந்த மந்திரங்களின் வழி, அமையும் சக்கர வடிம் தனியாகக் காட்டப்பட்டிருத்தல் காண்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage