
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 9. ஏரொளிச் சக்கரம்
பதிகங்கள்

அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும்
எம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும்
இரும்முதல் நாலும் இருந்திடு வன்னியே
இரும்முத லாகும் எழுத்தவை எல்லாம்.
English Meaning:
Letters of Siva-Sakti and Kundalini``A``, and Letters Five that follow*
These six are Letters of Primal One;
The six letters thus formed,
Are Sakti`s Letters,
The middle Letter of the first-Four (Va) aforesaid
Is Letters of Element Fire
Thus it is with these Letters holy.
Tamil Meaning:
மாதுருகாட்சரங்களில் அகாரம் முதலிய ஆறு எழுத்துக்களும் சிவன் எழுத்துக்களும் ஏகாரம் முதலிய ஆறு எழுத் துக்கள் சத்தி எழுத்துக்களும், இவற்றுக்கு இடையே உள்ள நான்கு எழுத்துக்கள் அங்கி எழுத்துக்களும் ஆகும். ஆதலின், உடலெழுத் துக்கள் பலவும் இந்த உயிரெழுத்துப் பதினாறனுள்ளே அடங்கிநிற்கும்.Special Remark:
உயிரெழுத்துக்களில் ஆறாவது எழுத்தினையே `இரு` எனத் தமிழ்முறையாற் குறித்தார். இதில் மூன்றாம் எழுத்தெதுகை வந்தது. நான்காம் அடியில், ``முதல்`` என்று, `முதன்மையான எழுத்து` என்றதாம். இரண்டாம் அடியின் முதற்சீரை முதலடியின் முதற்சீரே போலவும், மூன்றாம் அடியின் முதற்சீரை நான்காமடியின் முதற்சீரே போலவும் ஓதுவன பாடம் ஆகாமையறிக. உடலெழுத்துக்கள் பலவும் உயிரெழுத்துக்களில் அடங்கும் எனவே, அவ்வுயிரெழுத்துப் பதினாறினாற்றானே ஏரொளிச் சக்கரம் ஆக்கப்படும் என்றதாயிற்று, அங்ஙனம், அச்சக்கரம் அமையுமாறு:-எழுத்துக்களின் வைப்பு முறையில் ஏழாவது முதலாகப் பத்தாவது முடிவாக உள்ள அந்நான்கு எழுத்துக்களை அம்முறை யானே அடைத்தல் வேண்டுமாயினும், நாயனார் அவற்றை அங்கி எழுத்துக்களாக ஈற்றில் வைத்து ஓதினமையின் அவைகளை மேற் காட்டிய முறையானே அடைத்தல் வேண்டும். மேல் (1240) ``சொல்லிடு விந்துவும் ஈராறு நாதமாம்`` என்றமையால், ஆதி எழுத்தாய அம்முதல் ஆறும், அம்மை எழுத்தாய ஏமுதல் ஆறும் ஆகிய பன்னீரெழுத்துக்களையும் முறையானே அகார கலை முதலிய பிராசாத கலை பன்னிரண்டிற்குரிய பன்னிரு கலைக்கும் உரிய எழுத்துக்களாகக் கொள்ளல் வேண்டும்` ``மேல்வரும் அப்பதி அவ்வெழுத் தேவரின் மேல்வரு சக்கரமாய்வரும்`` (1241) என்றமையால், மேற்காட்டியவாறு இருபத்தைந்து புள்ளிகளால் பிறந்த பதினாறு அறைகளையுடைய சக்கரம் பன்னிரண்டு வரைந்து, அவை ஒவ்வொன்றின் முதல் அறையிலும் அ ஆ முதலிய பன்னிரண்டு எழுத்துக்களையும் முறையானே வைத்து ஏனைய எழுத்துக்களையும் முறையானே அடைத்து, எல்லாச் சக்கரங்களிலும் இங்குக் காட்டிய வாறே நான்காம் வரிசையில் ஏழாம் உயிர் முதலிய நான்கனையும் அடைத்து முடிக்க. அகாரம் முதற்கண் நின்றது முதலிய சக்கரங்கள் பன்னிரண்டும், முறையானே அகார கலா சக்கரம், உகார கலா சக்கரம் முதலாக உன்மனா கலாசக்கரம் இறுவாய்ப் பன்னிரு பிராசாத கலா சக்கரங்களாய் விளங்கும். பிராசாத கலைகள் பன்னிரண்டில் வியாபினிக்கும், சமனைக்கும் இடையே வியோம ரூபினி முதலிய நான்கு கலைகள் அடங்கி நிற்கும். ஆதலால், எல்லாச் சக்கரங்களிலும் நான்காம் வரிசையில் உள்ள ஏழாம் உயிர் முதலிய நான்கு கலைகட்கும் உரிய எழுத்துக்களாகக் கருதிக்கொள்க.
பன்னிரண்டு சக்கரங்களிலும் உள்ள அறைகள் அனைத்தும் கூடி, (12X16=192)நூற்றுத்தொண்ணூற்றிரண்டாம் ஆயினும், ஏழாம் உயிர் முதலிய நான்கெழுத்துக்கள் உள்ள(4X12=48) நாற்பத் தெட்டு அறைகளை எண்ணாது விடுப்ப, எஞ்சிய அறைகள் (12X12 =144)நூற்று நாற்பத்து நான்காய் வரையறைப்படும். அதனையே மேல் (1240)``சொல்லிய நூறொடு நாற்பத்து நால்உரு`` என்றார்.
இன்னும், ``விரிந்த எழுத்து, அப்பதுவாக`` என்னும் மந்திரங்களில் (1243, 44) அகார கலை முதலிய பன்னிரு கலைகளும் பிருதிவி முதலிய ஐம்பூதங்களில் நிற்கும் எனக் கூறினமையாலும், பிருதிவி முதலிய பூதங்கள் நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளாகவும் கருதப்படும் ஆதலாலும், அகார கலை முதலிய நான்கு கலைகளும் நிவிர்த்தி முதலிய நான்கு கலைகளிலும், அர்த்த சந்திரன் முதலிய நான்கு கலைகளும் சாந்தியதீத கலையிலும் நிற்க, சத்தி முதலிய நான்கு கலைகள் சாந்தியதீத கலைக்கு மேல் உள்ள மந்திர கலையில் நிற்கும் ஆதலாலும் அவற்றின்மேல் முறையானே அப்பன்னிரு சக்கரங் களையும் அமைத்தல் வேண்டும்.
இதனால், ஏரொளிச் சக்கரத்தில் அடைக்கப்படும் எழுத்துக் களது தொகையும், முறையும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage