
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
பதிகங்கள்

அவன்இவ னாகும் பரிசறி வாரில்லை
அவன்இவ னாகும் பரிசது கேள்நீ
அவன்இவன் ஓசை ஒளியினுள் ஒன்றிடும்
அவன்இவன் வட்டம தாகிநின் றானே.
English Meaning:
Way to Become One With SivaThey know not how He and you one become;
This the Way how He and you one become;
Hearken!
He stands in your hearing and sight
He stands in the Pranava within you.
Tamil Meaning:
சிவன் சீவனேயாய் நிற்கும் முறையை உள்ளவாறு உணர்கின்றவர் ஒருவரும் இல்லை. அதனை, மாணவனே, உனக்குச் சொல்கின்றோம்; கேள். சீவன் அறிகின்ற ஓசை, ஒளி முதலிய புலன்களையும் சிவன் அச்சீவனின் பொருட்டு அறிந்து நிற்கின்றான். அதனோடு, சீவனது சுட்டுணர்வை நிகழ்வித்தும் நிற்கின்றான்.Special Remark:
`இதுவே சிவன் சீவனேயாய் நிற்கும் முறைமை` என்பது குறிப்பெச்சம். `சிவன் சீவனுமாய் நிற்கின்றான்` என்பதற்கு, `பொன்னே பூடணமாய் நிற்றல்போல` எனவும், `மரந்தானே, கிளை, இலை, பூ, காய் முதலியனவாய் நிற்றல்போல` எனவும், `மகா ஆகாயந் தானே கடாகாயம், மடாகாயம் முதலியனவாய் நிற்றல்போல` எனவும், `நீர்தானே நுரை, குமிழி, திவலை முதலியனவாய் ஆதல் போல` எனவும் பலர் பலவாறு விளக்கங்கூறி மலைதல் பற்றி, ``அவன் இவனாகும் பரிசறிவார் இல்லை`` என்றார். ஓசை ஒளி, உபலக்கணம். ஒன்றுதல் அறிவினால் என்க. வரம்புபட்ட சுட்டுணர்வை வட்டமாக உருவகித்தார்.இதனால், ஞாயிறு கண்ணுக்குப் பொருள்களைக் காட்டுதல் போலச் சிவன் சீவனுக்கு எல்லாவற்றையும் அறிவித்தும், ஆன்ம போதம் கண் ஒன்றைக் காணுதற்குத் தானும் உடன்சென்று காணுதல் போலச் சிவன், சீவன் ஒன்றை அறிதற்குத் தானும் உடன்நின்று அறிந்தும் ஒற்றுமைப்பட்டிருத்தலே `அவன் இவனாய் நிற்கும் முறை` என, மேலே சுட்டியதன் இயல்பு தெரித்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage