
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 14. கால சக்கரம்
பதிகங்கள்

மனைபுகு வீரும் மகத்திடை நாடி
எனைஇரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே.
English Meaning:
Yoga ExplainedYou who enter the land of yoga practice!
Know that it consists in this
The measure of breath inhaled is twelve inches
Having measured accordingly
Exhale eight matra consciously
The four matras retained
Are in the six adharas to suffuse
And thus breathing examine to Tattvas twenty and five.
Tamil Meaning:
ஞாயிற்றின் வட்டத்துள், `முப்பது நாள் ஒரு கூறாகப் பன்னிரண்டு கூறு கூடியது ஒருவட்டம்` என்று அறிந்து, அவ் வட்டம் சிலபோது, பன்னிரண்டு கூறும் கூட வருகின்ற முந்நூற்றறுபது நாள்களுக்கு மேல் ஆறு நாளும், சில போது நான்கு நாளும் கூடி நிற்றலையும் உங்கள் மனத்தில் நன்கு ஆராய்ந்து மேற்சொல்லிய செயல்களில் புகுவீராக.Special Remark:
`நாள்` என்பது, `ஞாயிறு தோன்றி மறைந்து மீளத் தோன்றுமளவும் உள்ள காலம்` என்பதும், அக்காலத்துள் ஞாயிறு காணப்பட்டு நிற்பது, `பகல்` என்றும், காணப்படாது நிற்பது `இரவு` என்றும் சொல்லப்படுதலும் யாவரும் அறிந்தவை. அவ்வளவான நாள் முப்பது கூடியது, ஞாயிற்றின் பகுதி வட்டம். இதனை, மேடம் முதலிய ராசிகளின் தொடர்பு பற்றி, `மேடரவி, இடபரவி` முதலாக வழங்குவர். எனினும், இப்பகுதிகளில் சந்திரன் முழுநிலவாய்த் தோன்றும் நட்சத்திரத்தை ஒட்டி, இவற்றை, சித்திரைத்திங்கள் வைகாசித் திங்கள் முதலாக வழங்குதலே பெரும்பான்மை. இவ்வாற்றால், ஞாயிற்றின் வட்டப் பகுதியும் வேறே. திங்களின் வட்டப்பகுதியும் வேறே. ஞாயிற்றின் வட்டப்பகுதி பெரும்பான்மை என்றும் ஒருபடித்தாய் நிகழும். திங்களின் வட்டப்பகுதி அவ்வப்பொழுது வேறுபடும். ஞாயிற்றின் வட்டப்பகுதி ஒருபடித்தாய் நிகழ்தலின், அதனை உலகியல் நடை முறைக்கும், திங்களினது வட்டப்பகுதியால் உலகின் விளைவுகள் வேறுபடுதலின் அதனை நோன்புகள் முதலியவற்றிற்கும் வகுத்தனர் முன்னோர். கோள்களின் நிலைகளால் உலகில் விளைவுகள் வேறு படுதலை, நாவுக்கரசர், ஞானசம்பந்தர் பாண்டிநாடு செல்ல நினைத்த பொழுது, `நாளும் கோளும் வலியில` எனக் கூறியருளினமை யாலும், அதுபொழுது ஞானசம்பந்தர், `அவை அன்ன வாயினும் சிவனடி யாரை வாதியாது, நல்லனவாம்` என்பதை வலியுறுத்தித் திருப்பதிகம் அருளிச்செய்தமையானும், பின்னும் அவர் (ஞானசம்பந்தர்) புனல் வாதத்திற்கு அருளிச்செய்த திருப்பாசுரத் திருப்பதிகத்துள்,``கோட்பா லனவும் வினையுங் குறுகாமை எந்தை
தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க``
என்று அருளிச் செய்தமையானும் அறியலாம்.
``மகத்திடை நாடி`` என்பது பாடம் அன்று. பத்து அஞ்சு - பதினைந்து. இரு பதினைந்து - முப்பது. ``எனை முப்பதும்`` என்றது எந்த ஒரு முப்பதுநாள் கூடிய பகுதியும் ஞாயிற்றின் வட்டத்தில் பன் னிரண்டில் ஒருகூறாய் நிற்கும் என்றவாறு. இக் கூறு `மாதம்` எனவும், இம் மாதம் பன்னிரண்டு கூடிய ஒரு வட்டம் `யாண்டு அல்லது வருடம்` எனவும் படும். ஞாயிற்றின் ஒரு வட்டத்தில் முந்நூற்றறுபது நாள் களுக்கு மேலும் சில நாள் கூடுதல், சில மாதங்கள் முப்பதுக்கு மேலும் சில நாள்களைப் பெறுதலினாலாம். சில மாதங்கள் முப்பது நாளிற் குறைதலும் உண்டு. இவை எல்லாம் சூரியன் அந்த அந்த இராசியோடு தொடர்புகொண்டு நிற்கும் நிலையைப் பற்றியன. சில யாண்டுகளில் ஆறு நாளும், சில யாண்டுகளில் நான்கு நாளும் கூடுதலை, `யாண் டொன்றுக்கு முந்நூற்றறுபத்தைந்து நாள்` என்று அமைத்துப் போவர். இவற்றையெல்லாம் அவ்வப்பொழுது அறுதியிட்டுக் கூறுவர் அறிந்தோர். இவர் `கணிவர்` எனப்படுவர். ``தனை`` என்றதும், ``தற் குறி`` என்றதும் முறையே, ஞாயிற்றின் முழு வட்டத்தையும், அதன் பகுதி யாய நாளினையுமாம். `ஏற அட்டும்` என்பது குறைந்து நின்றது. ஏற அட்டுதல் - கூடச் சேர்த்தல். வினை அறி ஆறு - ஞாயிற்றின் செலவை அறியும் வழி. `எனை முப்பதும் ஈராறு என்னும் அடுக்காகக் கூட்டி ஞாயிற்றின் முழு வட்டத்தின் அளவை உணர்ந்து, தற்குறி ஆறு, விளங்கிய நால் இவற்றையும் உம் மனத்திடை நாடி மனை புகுவீர்` என முடிக்க. முப்பது முதலியன, அவ்வளவினவாகிய நாள்களைக் குறித்தன.
இதனால், கால சக்கரத்தின் பெரும்பான்மை இயல்பு இனிது விளங்கக் கூறப்பட்டது. `சிறுபான்மை இயல்புகளைக் கணி நூல்களில் கண்டுகொள்க` என்பது கருத்து.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage