
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 4. ஒளிவகை
பதிகங்கள்

ஒளியை அறியில் உருவும் ஒளியும்
ஒளியும் அருவம் அறியில் அருவாம்
ஒளியின் உருவம் அறியில் ஒளியே
ஒளியும் உருக உடன்இருந் தானே.
English Meaning:
Know Light WithinKnow the Light, your From becomes Light;
Know the Hidden From; you that From become;
Know the Light`s From; you that Light become;
That Light within you to melt, He in love stand.
Tamil Meaning:
உலகத்தில் கண்வழியாகக் காட்சி நிகழுங்கால் அக்காட்சி காணப்படும் பொருள், அதுவும் அதனைக் காணும் கண்ணொளியும் விளங்குதற்கு இன்றியமையாத் துணையாகிய ஒளி, அவ்வொளியால் விளங்கி உருவத்தைக் காண்பதாகிய கண்ணொளி ஆகிய மூன்றன் கூட்டத்திலே நிகழ்வதாகும். ஆயினும் கண்ணால் உருவத்தைக் காண்கின்றவன் அம்மூன்றனையும் ஒருங்கே அறிதல் இயலாது) மற்று காணப்படும் உருவத்தையும், காண்பதாகிய கண்ணொளியையும் விளக்கி நிற்கின்ற அந்த ஒளியை அறிவானாயின் அப்பொழுது ஏனை யிரண்டும் அறியப்படாமல் மறைந்து நிற்கும். இனிக் காணப்படும் உருவத்தை அறிவானாயின் அப்பொழுது ஏனையிரண்டும் மறைந்து நிற்கும், இனிக் கண்ணொளியின் இயல்பை அறியின் அப்பொழுது ஏனையிரண்டும் அறியப்படாமல் மறைந்து நிற்கும். இம்முறையில் தான் சிவன்தான் ஆன்ம ஒளி மறைந்தவிடத்து அவன் அவ்வான்மாவினோடு உயிர்க்குயிராய் என்று உடனாகியிருத்தல் விளங்கும்.Special Remark:
`ஆகவே, அவ்வாற்றால் அவனை அறிந்து நிற்றலே அறிவுடைமையாம்` என்பது குறிப்பெச்சம். தத்துவத்துறையில் `பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களுக்கிடையே உள்ள உறவு எத்தகைய உறவு, என்னும் ஆராய்ச்சியல் ``அவ்வுறவு த்துவித உறவு`` என்னும் சிவாகநூல் துணிவினை முன்னைத் தந்திரத்தில், `பதி, பசு, பாசம் வேறின்மை` என்னுக. அதிகாரத்தில் ஓராற்றால் விளங்கிய நாயனார், அவ்வுறவு பிரசாத யோகத்தில் நிகழும் ஒளிக் காட்சியில் வைத்து அறியின் இனிது விளங்குதல் பற்றி அதனை இங்கு இவ்வாறு நுண்ணிதாக விளக்கினார். மெய்கண்ட தேவரும்,``காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்``3
என அருளிச் செய்ய, அதனையே அருணந்தி வேதர்,
``... ... காட்டக் கண்டிடும் தன்மை உடைய கண்ணிற்கு
ஏயும் உயிர் காட்டிக்கண் டிடுமா போல
ஈசன் உயிர்க்குக் காட்டிக் கண்டிடுவன்``9
எனவும், உமாபதி தேவர்,
``அறிவொளிபோல் பிறிவரும் அத்துவிதமாய்``l எனவும் கூறினர். ``அறிவொளி`` என்றதில் அறிவு, ஆன்ம அறிவு. ஒளி, கண்ணொளி.
முதற்கண் உள்ள `ஒளி`, காட்டும் ஒளி அது விளக்கொளி ஞாயிற்றின் ஒளிகளில் ஒன்றாகலாம். இரண்டாவதாய் உள்ள `ஒளி`, காணும் ஒளியாகிய கண்ணொளி இரண்டாம் அடியில் உள்ள ``ஒளியும்`` என்பது `செய்யும்` என் முற்று. `மறையும்` என்பது அதன் பொருள். அஃது, ``உருவும், ஒளியும்`` என்னும் எழுவாய்கட்கும் பயனிலையாய் நின்றது. ஒளிதல் தன்வினை; ஒளித்தல் பிறவினை. அவை `செய்யும்` என் முற்றாகுமிடத்து முறையே `ஒளியும்` எனவும், `ஒளிக்கும்` எனவும் வரும் ``ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும்``8 என்பதில் ``ஒளிக்கும்`` என்பது தன்வினையால் நின்றது இரண்டாம் அடிப்பகுதியை, `உருவகத்தை அறியில் உருவேயாம்` என விரித்துக்கொள்க. `ஏனையிரண்டும் தோன்றா` என்பது கருத்து. மூன்றாம் அடியில் உள்ள ஒளிகள், கண்ணொலியாம். அவ்விடத்து ``உருவம்`` என்றது அதன் இயல்பை. இங்கும் ``ஒளியே`` என்றது, `அவ்வொளியே தோன்றும்; ஏனையவை தோன்றா` என்றதாம். மூன்றடடிகளாலும் உவமையே கூறப்பட்டது. ஈற்றடியில் உள்ள ஒளி, ஆன்ம அறிவு. அஃது உருகுதலாவது, நிலையழிதல் உம்மை, `பாச அறிவேயன்றி` என இறந்தது தழுவிற்று. ``உருக`` என்னும் செயவெனெச்சம் காரணப் பொருட்டாய் நின்றது. `இருப்பான்` என்னும் எதிர்காலம், விரைவு பற்றி ``இருந்தான்`` என இறந்த காலமாயிற்று. இருத்தல் இருக்கும் அது விளங்குதல் இருத்தலுக்கு `சிவன்` என்னும் எழுவாய் வருவிக்க.
உவமையில், `மூன்றில் ஒன்றை யறியுமிடத்து ஏனையவவை மறைந்து விடும்` என ஒரு தொடராற் சுருங்க ஓதாது, மூன்று தொடரால் விரியக் கூறினார். `மூன்று யாவை` என்பதை முன்னர்த் தொகுத்து கூறாமையின் அவை விளங்கா என்பது பற்றி. பொருளில், காட்டுவது சிவனருளும், காண்பது ஆன்ம அறிவும், காணப்படும் பொருள் பதி, பசு, பாசங்களுமாகக் கொள்க. கண் உருவங்களைக் காணும்பொழுது காட்டுவதாகிய ஒளியையும், காண்பதாகிய தன்னையும் மறந்து, உருவங்களை மட்டுமே காண்பதுபோல, ஆன்ம அறிவு பெத்த காலத்தில், அறிவிப்பதாகிய திருவருளையும், அறிவதாகிய தன்னையும் அறியாது அறியப்படுவதாகிய உலகத்தை மட்டுமே அறிந்து வருதலால் அது பொழுது அது தன்னையும், தலைவனையும் அறியாது மயங்கு கின்றது. ஆசிரியர் அருளுரையைக் கேட்டு அதன்வழி நின்று அதுதான் அறியும் முறைமையை உற்றுணருமாயின் மயக்கம் நீங்கி மெய் யுணர்வைப் பெறும்` என்பதும் `மெய்யுணர்வாவது முப்பொருளும் பிரித்தறியுமாறு வேறு வேறு நில்லாது அத்துவிதமாய் இருத்தலின். அந்நிலையை அறிதல் ஆசிரியரது அருளாலன்றிக் கூடாது` என்பதும் கூறியவாறு. இம்மந்திரம் சொற்பின்வரு நிலையணி பெற்றது,
இதனால் `உலகில் காட்டுவதும், காண்பதும், காணப்படுவதும் ஆகிய மூவகை ஒலிகளின் முறைமையில் வைத்து பிரணவ யோகத்தில் வெளிப்படும் ஒளிகளின் இயல்பு உணரற்பாலன` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage