
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்
பதிகங்கள்

மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.
English Meaning:
Bodies — Gross, Subtle and Causal Merge In ParaThe Gross body with presence prominent
The Subtle body that invisible takes shape,
And the Causal body that by inference is,
—All these bodies are
That in Lord`s Feet merge.
Tamil Meaning:
`தூலம், சூக்குமம், பரம்` என்னும் மூன்றுடம்பு களையும் ஒருங்குசேர்த்து ஓர் உடம்பிற்கு உவமித்தால், தூல உடம்பு முகத்தையும், சூக்கும உடம்பு கழுத்திற்குக் கீழும், காலுக்கு மேலும் உள்ள உடலையும், பர உடம்பு கைகால்களையும் ஒத்து நிற்கும் அவ்வாறு அமைந்த அந்தப் பேருடம்பு சிவனது திருவருளில் அடங்கும்.Special Remark:
மெய்யினில் தூலம் - கண்கூடாக விளங்குதலால் ஐயத்திற்கு இடமின்றித் துணியப்படுகின்ற தூல உடம்பு. பொய்யினில் பொருந்தும் சூக்க உடல் - காட்சிப் புலனாகாமையால் உண்மை எளிதில் துணியப்படாது நுண்ணிதாய் உள்ள சூக்கும உடம்பு. `தூலம், சூக்குமம்` என்பவற்றின்பின் `ஆக` என்பது வருவிக்க. காட்டும் உடல் - உயிர்க்கு அறிவைத் தரும் பர உடம்பு. இங்கு `உடலை` என்றதில் ஐ சாரியை; வேண்டாவழி வந்தது. முகத்தையும், உடலையும் என்பவற்றோடு இயைக்க `கையினில்` என்பதையும் `கையையும்` எனத்திரிக்க. இஃது உருபு மயக்கம். துல்லியம் - ஒப்பு. இதன்பின் `என்க` என்னும் சொல்லெச்சம் வருவித்து, `துல்லியம் என்க` என உரைக்க. ஈற்றில் நின்ற `உடம்பு` என்பதற்கு, இவ்வாறான உடம்பு,` என உரைக்க.இதனால், `மூவகை உடம்புகளும் வேறுவேறு இயல்பின வாயினும் செயற்பாட்டின்கண் ஒன்றுபோல இணங்கிச் செயற்படும்` என்பது கூறப்பட்டது. `அதற்குச் சிறந்த காரணம் திருவருள்` என்றற்கு அஃதும் உடன் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage