
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்
பதிகங்கள்

எட்டினில் ஐந்தாகும் இந்திரி யங்களும்
கட்டிய மூன்றும் கரணம தாயிடும்
ஒட்டிய பாசம் உணர்வது வாகவே
கட்டி அவிழ்த்திடும் கண்ணுதல் காணுமே.
English Meaning:
Five Indriyas and Three KaranasOf the organs eight thus stated,
First Five are Indriyas (External Sense Organs)
The rest three are Karanas (Internal Sense Organs)
To these attached is primordial Pasa`s sentience,
Thus He binds them
And unbinds them,
He, the Lord of Forehead-Eye.
Tamil Meaning:
எட்டுக் கருவிகள் கூடியதனால் `புரியட்ட காயம்` எனப்படும் உடம்பு - என மேற்கூறப்பட்ட சூக்கும சரீரத்திலிருந்தே மாபூதங்கள் ஐந்தும், இருவகை இந்திரியங்களும் தோன்றும். (எனவே, அப்பதினைந்தும் கூடியதே தூலசரீரமாம்.) இனித்தூல சரீரத்தில் உள்ள இருவகை இந்திரியங்களும், சூக்கும சரீரத்தில் உள்ள அந்தக்கரணங்கள் மூன்றும் `சரீரம்` எனப்பட்டாலும், உண்மையில் அவை கரணங்களேயாம்.அறிவுக்குத் துணையாதல்பற்றி ஆன்மாவோடு பெரிதும் ஒற்றுமைப் பட்டு நிற்கின்ற அவற்றைக் கொண்டே சிவன் ஆன்மாவின் அறிவைப் புலன்களில் அகப்படுத்தி வைத்துப் பின்பு அப்புலன்க ளினின்றும் பிரித்துவிடுவான்.
Special Remark:
`ஐந்து` என்றது மாபூதங்களையாதல் தெளிவு ஆகும்` என்பதனை `இந்திரியங்கள்` என்பதன் பின்னும் கூட்டுக. `இந் திரியங்கள்` எனப் பொதுப்படக் கூறியதனால் ஞானேந்திரியம், கன் மேந்திரியம் இரண்டும் கொள்ளப்படும். மாபூதங்கள் தன்மாத்திரை களிலிருந்தும், ஞானேந்திரியங்கள் அகங்காரத்தின் சாத்துவிகக் கூற்றி லிருந்தும், கன்மேந்திரியங்கள் அகங்காரத்தின் இராசதக் கூற்றி லிருந்தும் தோன்றுவனவாம். இங்ஙனம் தோன்றிய பதினைந்தனுள் மாபூதங்களே எலும்பு, தோல், தசை முதலியவனவாகப் பரிணமித்துத் தூலதேகமாக, இருவகை இந்திரியங்களும் பிறவாறு பரிணமியாது நிற்கும். ஆகவே, மாபூதங்களே உண்மையில் தேகம் ஆக, இருவகை இந்திரியங்கள் அத்தேகத்தின் நிற்றலால் ஒற்றுமை பற்றி, `தனு` எனப்பட்டாலும் அவையும், அந்தக் கரணங்களும் அவ்வாறு சூக்கும தேகத்தில் நிற்றல் பற்றி, `தனு` எனப்பட்டாலும் அவையும் உண்மையில் கரணங்களே என்பது உணர்த்தற்கு, `இந்திரியங்களும்` மூன்றும் கரணமாதாயிடும்` என்றார். இவ்வாறு `மூன்றும்` என்பத னோடு இயைதற் பொருட்டு, `ஆகும்` என்பதனை மீண்டும் கூறாது விடுத்தார். ஆகவே, `இந்திரியங்களும்` என்பதனை `இந்திரியங்களும் ஆகும்` எனவும் `இந்திரியங்களும் மூன்றும்` எனவும் இருமுறை ஓதி இயைத்துக் கொள்க. சூக்கும சரீரத்திலிருந்தே தூல சரீரம் தோன்றும் என்றற்கு, `எட்டினில் ஐந்து ஆகும்; இந்திரியங்களும் ஆகும்` என்றும், `தத்துவங்கள் யாவும் பொதுவாக, `தனு` என்று கூறப்பட்டாலும், அவற்றுட் சில உண்மையில் கரணங்களே` என்றற்கு, `இந்திரியங் களும் மூன்றும் கரணமதாகும்` என்றும், `அவற்றுள் அறிவுக் கரணங்களே வலியபந்தங்கள்` என்றற்கு, `ஒட்டியபாசத்து உணர்வது வாகவே கட்டிய` என்றும் கூறினார். கட்டிய - ஒன்று படுத்தப்பட்ட. காணும், முன்னிலை அசை. `அறிமின்` என்றும் ஆம்.இதனால், `மேற்கூறிய என்பு முதலிய தாத்துவிகங்களே யன்றி, இருவகை இந்திரியங்களும், மாபூதங்களும் ஆகிய பதினைந்து தத்துவங்களும் தூலசரீரமாம்` என்பதும், `அவற்றுட் சில உண்மையில் கரணங்களேயாம்` என்பதும் கூறப்பட்டன.
தனு, அல்லது தேகம் ஆன்மாவிற்கு நிலைக்களமும், கரணங்கள் ஆன்மாவிற்குக் கருவியுமாய் உதவும் என்க. இந்திரியங்கள் புறக்கருவிகளும், மனம் முதலியன உட்கருவிகளும் ஆதல் அறிக. `உட்கருவிகள்` என்பனவே, `அந்தக் கரணங்கள்` எனப்படுகின்றது.
[பதிப்புக்களில் முன் தந்திரத்தில், `கூடா ஒழுக்கம்` என்னும் அதிகாரத்து இறுதியில் காணப்படும் `இந்தியம் அந்தக்கரணம் இவை உயிர்` என்னும் மந்திரம் இத்தந்திரத்தில் இம்மந்திரத்தை அடுத்து இருந்ததாகும்.]
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage