ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்

பதிகங்கள்

Photo

இந்தியம் அந்தக் கரணம் இவை உயிர்
வந்தன சூக்க உடலன்று மானது
தந்திடும் ஐவிதத் தால்தற் புருடனும்
முந்துளம் மன்னும் மற்றாறும் முடிவிலே.

English Meaning:
Tamil Meaning:
`மாபூதங்கள் மட்டுமே உயிர்க்குக் கரணம் ஆகா தொழிய, `இருவகை இந்திரியங்களும் அந்தக்கரணம் போல உயிர்க்குக் கரணமாம்` என மேலே சொல்லப்பட்டமையால், `மாபூதங்ளும் அவற்றின் காரியங்களுமே தூல தேகமாக இந்திரியங் களும் அந்தக்கரணம்போலச் சூக்கும தேகமாம் என்றலே பொருத்த முடைத்துப்போலும்` எனின், அங்ஙனம் கொள்ளுதல் பொருந்துவ தன்றாம். (இந்திரியங்கள் தூலதேகத்தில் இருந்து புறப் பொருளை அறிதலும், பொருள்களை எடுத்தல், கொடுத்தல் முதலிய வற்றைச் செய்தலும் கண்கூடாதலின் அவை தூல தேகமேயாம் என்பது கருத்து.) இனி மூலப்பிரகிருதியினின்றும் தோன்றுவனவாகிய பஞ்சக் கிலேசங்களால் அவற்றிற்கு முன்பே தோன்றிய பொதுப் புருட தத்துவத்தில் சிறப்புப் புருட தத்துவம் பொருந்தும். வித்தியா தத்துவம் ஏழில் `புருடன்` தவிர மற்றை ஆறு தத்துவங்களும் புருட தத்துவத் திற்கு மேலே உள்ளனவாகும்.
Special Remark:
`இந்திரியம்` என்பது இடைக் குறைந்து நின்றது. `வந்தன என்பதன்பின், `ஆயினும்` என்னும் சொல்லெச்சம் வருவித்து, `இவை என்பு, தோல், இறைச்சி முதலியனபோலன்றி, உயிரின் அறிவு செயல்களுக்குக் காரணமாய் நிற்றலின் உயிர்போலவே தோன்று மாயினும்` என உரைக்க. இதனால், `இருவகை இந்திரியங்கள் - சூக்கும தேகம் - என்றால் என்ன` என்னும் ஐயத்தை நீக்கியவாறு. `உயிர் வந்தன` என்பது `உயிர்போல வந்தன` என வினையுவமத் தொகை, `உளத்தின்கண் மன்னும்` என ஏழன் உருபு விரிக்க.
தூல தேகம், சூக்கும தேகம் இவற்றைக் கூறியபின், `பண் புடம்பு` எனப்படும் குண சரீரத்தின் இயல்பையும், அதற்கு மேல் உள்ள `போர்ப்புடம்பு` எனப்படும் கஞ்சுக சரீரத்தின் இயல்பையும், அதற்கு மேல் உள்ள `முதலுடம்பு` எனப்படும் காரண சரீரத்தின் இயல்பையும் கூறினார்.
மான் - மகத்து; மூலப் பிரகிருதி. அது முக்குணமயமானது. அக்குணங்கள் வெளிப்படாது சூக்குமமாய் நின்றநிலை அவ்வியத் தமும், தூலமாய் வெளிப்பட்டுச் சமமாய் நின்றநிலை வியத்தமும் ஆகும். அவ்வியத்தமே பிரகிருதி. வியத்தமே காரணநிலையாதலின் அதனால் உயிர்க்கு வருவது ஒன்றுமில்லை. வியத்தமே காரிய நிலையாதலின் அதனாலே உயிர் முக்குணமயமாய் விகாரம் எய்துகின்றது. ஆகவே இந்த வியத்தமே குணசரீரம் ஆதல் அறிக.
பஞ்சக் கிலேசமாவன, அவிச்சை, அகங்காரம், இச்சை, ஆசை, கோபம் - என்பன. `இவை பிரகிருதியினின்றும் தோன்றும்` என்பதும், `இவற்றின் தொடர்பினாலே, இயற்கையில் விகாரம் இன்றியிருக்கும் உயிர் விகாரம் எய்தி, அகக் கரணம் புறக் கரணங்களால் புறத்து நிற்கும் பொருள்களைப் பற்றி, இன்பத் துன்பங்களை அடையும்` என்பதும் சாங்கிய மதக்கொள்கைகள். `அக்கொள்கை ஆகமங்கள் சிலவற்றிலும் சொல்லப்பட்டுள்ளது` என்பது இம்மந்திரத்துள், `மானது தந்திடும் ஐவிதத்தால் தற்புருடனும் முந்துளம் மன்னும்` என்பதனால் அறியக் கிடக்கின்றது. இந்தப் பஞ்சக் கிலேசத்தாலே உயிர் முக்குண உலகத்தோடு தொடர்பு பட்டு வினைகளை ஈட்டுவதும், நுகர்வதுமான நிலையை அடைதல் பற்றி இக் கிலேசத் தொகுதி `பும்சூத்துவ மலம்` எனப்படும் என்றும், பும்சுத்துவ மலத்தை எய்திய உயிர் `புருடன்` எனப்படும் என்றும் சிவஞான போத மாபாடியத்தில் சொல்லப்பட்டது. 3
இனி, `பிரகிருதிக்கு முன்பே புருடதத்துவம் உள்ளது` என்பது ஆகமங்களில் வெளிப்படை. அது பற்றி மாபாடியம் உடையார், `முன்பு உள்ளது பொதுப் புருடதத்துவம்` என்றும், `பின்பு பஞ்சக்கிலேசத்தால் ஆவது சிறப்புப் புருட தத்துவம்` என்றும் கூறிச் சிவஞான சித்தியாரின் `நிச்சயம் புருடனாகிப் பொதுமையில் நிற்பனன்றே`l என்பதைத் தம் கொள்கைக்கு மேற் கோளாகக் காட்டினார். `பொதுமையில் நிற்பன்` என்றது பொதுப் புருட தத்துவத்தைக் குறிக்குமாயின், பின்னர் பும்சுத்துவ மலத்தைக் குறிப்பிட்டு, அதனால் சிறப்புப் புருட தத்துவம் தோன்றும்` என்பதனையும் கூறியாக வேண்டும். அவ்வாறு பஞ்சக் கிலேசமோ, பும்சுத்தவ மலமோ, சிறப்புப் புருட தத்துவமோ எந்தச் சித்தாந்த மூல நூலிலும், எங்கும் சொல்லப்படவில்லை. எனினும், `இம் மந்திரத்தில் அவை கூறப்படுதல் சில ஆகமங்களின் கூற்றுப் பற்றி` எனக் கொள்ள வேண்டியுள்ளது. பும்சுத்துவம் - புருடத் தன்மை.
சித்தாந்த நூல்களில், புருடத்தத்துவம் வித்தியா தத்துவம் ஏழனுள் தோற்ற முறையில் இறுதியானதாகச் சொல்லப்படுகின்றது அதனால் மூலப் பிரகிருதியை அடுத்து மேல் நிலையில் உள்ளதாகும். அதற்குமேல் ஏனை வித்தியா தத்துவங்களில், `அராகம், வித்தை, கலை, நியதி, காலம்` என்பன முறையே ஒன்றன்மேல் ஒன்றாய் உள்ளன. இந்த ஐந்து தத்துவங்களையும் ஐந்து சட்டைகளாக உயிர் அணிந்து நின்ற நிலையில்தான் அது `புருடன்` எனப் பெயர் பெறுகின்றது. அது பற்றி அந்நிலை ஒரு தத்துவமாகச் சொல்லப் படுகின்றது. காலம் முதலாக உள்ள ஐந்தும் ஐந்து சட்டை போல்வதால், அவற்றது தொகுதி `கஞ்சுக சரீரம்` எனப்படுகின்றது. இந்த ஐந்து தத்துவங்களும் `மாயை` என்னும் தத்துவத்தின் காரியமாய், அதனின்றும் நேரேயும், பின் ஒன்றின் ஒன்றாயும் தோன்றும். ஆதலால் அம் மாயா தத்துவம் ஏனை வித்தியா தத்துவங்கட்குக் காரணமாதல் பற்றி, `காரண சரீரம்` எனப்படுகின்றது. ஆகவே, வித்தியா தத்துவங்கள் ஏழனுள் புருடன் கீழே நிற்க, ஏனை ஆறும் அதற்கு மேல் உள்ளனவாதல் பற்றி, ``மற்றாறும் முடிவிலே`` என்றார்.
தற்புருடன் - தானாகிய புருடன். அஃதாவது, சகலனாகிய புருடன். பிரளயாகலரினின்றும் சில உயிர்கள் `சகலர்` எனப் பெயர் பெறுதற்குக் காரணம் அவை முக்குண வடிவாகிய பிரகிருகியாற் கட்டுண்பதே யாதலின், `ஐவிதத்தால் தற்புருடன் மன்னும்` என்றார். முந்து உளம் - இப்புருடனுக்கு முன்னே உள்ள புருடன் அது, வித்தியா தத்துவங்களில் தோற்ற முறையில் இறுதியானது. அந்த அளவில் நிற்கும் உயிர்கள் பிரளயாகலராகும்.
வித்தியா தத்துவங்கள் அசுத்த மாயையின்காரியம். எனினும் அசுத்த மாயை பெரிதாய், வியாபகமாய் இருத்தலால், அது முற்றிலும் தத்துவங்களாய்ப் பரிணமித்துவிடுவதில்லை. அதனில் ஒரு சிறு கூறே தத்துவங்களாய்ப் பரிணமிக்கும். இது `மண் குடமாயிற்று` என்றால், அளவின்றியுள்ள மண்முழுதும் குடமாய் விடாது அதில் ஒரு சிறு பகுதியே குடமாயது போல்வதாம்.
இனி, மண்குடமாவதற்கு முன் அங்ஙனம் ஆகுமாறு பிசைந்து பக்குவப்படுத்தப்படுதல் போல அசுத்த மாயையின் ஒரு கூறு தத்துவங்களாய்ப் பரிணமிக்குமாறு பக்குவப்படுத்தப்படும். அங்ஙனம் செய்யப்பட்ட அதுவே, `மாயா தத்துவம்` என ஒரு தத்துவமாகச் சொல்லப்படுகின்றது. `இவ்வாறு அசுத்த மாயையை அனந்த தேவர் தமது சத்தியால் பக்குவப்படுத்துவார்` என்பது ஆகமங்களின் கருத்து. இந்த மாயா தத்துவமே காரண சரீரம் என்க.
இதனால், பஞ்ச பேத உடல்களில் முன் சொல்லப்பட்ட இரு பேதங்கள் போக, எஞ்சிய மூன்று பேதங்கள் கூறப்பட்டன.