
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 1. உடலில் பஞ்ச பேதம்
பதிகங்கள்

காயப்பை ஒன்று சரக்குப் பலஉள
மாயப்பை ஒன்றுண்டு மற்றுமோர் பைஉண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணா மயங்கிய வாறே.
English Meaning:
Body Bag and Maya BagThe body is a bag
Many the ingredients it holds;
There is yet another bag within;
It is the Maya bag;
When the Thief (Jiva)
The body bag leaves,
The Maya bag
Like dust becomes.
Tamil Meaning:
ஒரு பையில் பல பண்டங்களை அடைத்து வைத்தல் போல, யாவராலும் நன்கு அறியப்படும் உடம்பாகிய ஒரு பை ஒவ்வோர் உயிர்க்கும் கிடைத்திருத்தல் கண்கூடாக, அதன்கண் அடைக்கப்பட்டுள்ள பண்டங்களோ பல உள்ளன. (அவற்றை ஆராய் கின்றார் ஒருவரும் இல்லை) இனி, அந்தப் பை மாயம்போலக் கட்புல னாகி, விரைவில் மறைவதாகும். என்றாலும், அந்தப் பைக்குள்ளே மற்றொரு பையும் உண்டு; (அதனை அறிந்தோர் சிலரே.) யாவரும் அறிந்த அந்தப் பைக்குள் அதற்கு வேறாகிய ஒன்று உள்ளதோ, இல்லதோ` என ஐயுறுமாறு ஒளிந்து நிற்கின்ற உயிர் அதனை விட்டு வெளியே போய்விடுமானால், தோன்றியழிவதாகிய அந்த உடம்பு மண்ணோடு மண்ணாய்ப்போக, அதனை நிலையானதாகக் கருதி, அதனைத் தமக்கு உறவாகத் தெளிந்திருந்தோர் திகைப்புற்று நிற்கும் நிலை இரங்கத்தக்கதாகும்.Special Remark:
`காயப்பை` என்றது உருவகம், சரக்காவன. என்பு, தசை, நரம்பு, குருதி, கோழை முதலியனவற்றை, `சரக்கு` எனவே கூறியது சிறப்புருவகம். `காயப்பை ஒன்று` என்பதன் பின்னும் `உண்டு` என்பது எஞ்சி நின்று. ஈரிடத்தும் `மாய் அப்பை` எனப் பிரிக்க மாய்தல் கூறவே, தோன்றுதல் தானே பெறப்பட்டது. `மற்றும் ஓர் பை உண்டு` என்பதை உணர்த்தப்புக்கவர், `முற்கூறிய அந்தப் பையே அன்றி` என்றற்கு `மாய் அப்பை ஒன்றுண்டு` என அதனையே மீளச்சுட்டிக் கூறினார். முதற்கண் கூறிய பையை `மாயும் பை` என்றதனால், மற்றும் ஒன்றாகக் குறிக்கப்பட்ட பை, `மாயாப் பை` என்பது பெறப்பட்டது. மாயும் பை தூல உடம்பும், மாயாப் பை சூக்கும உடம்புமாம் என்க. உயிர்கட்கு அவ்வப்பொழுது வினைக்கீடாக விரைவில் மாறி மாறி வருவது தூலவுடம்பேயாதலும், நுண்ணுடம்பு அவ்வாறன்றி, உயிர் வீடுபெறும் வரையிலாவது, அல்லது உலகம் அழியும் வரையிலாவது உயிர்களோடு நீங்காது நிற்பது ஆதலும் அறிக. இங்ஙனமாகவே, பஞ்ச பேதங்களுள் `தூலம, சூக்குமம்` என்னும் இரு பேதங்களைக் குறிப்பிட்டு அவற்றது இயல்பு தொகுத்துக் கூறியவாறாயிற்று. என்பு, நரம்பு, குருதி முதலியவற்றின் கூட்டமே தூல தேகமாயினும், அவை அங்ஙனம் வெளித் தோன்றாது மறைந்து நிற்றல் பற்றித் தூல தேகத்தைப் பையாகவும், என்பு முதலியவற்றை அதனுள் அடைக்கப்பட்ட சரக்காவும் உருவகம் செய்தார். தூலதேகத்தைப் `பை` என்றமையால் அதனோடு ஒப்ப ஏனைய தேகங்களையும் `பை` என்றார். `ஆக` என்பது ஈறு குறைந்து நின்றது. `மற்றும் ஓர் பை உண்டு` என அறிவுறுத்தமையால், `உடம்பாவது கண் கூடாய்த் தோன்றி யழிகின்ற அஃது ஒன்றுமே போலும்` எனவும், `அது மாய்ந்தபொழுது உயிர் தனித்து நிற்பதுபோலும்` எனவும் மயங்காது, `தூல உடம்பு நீங்கிய பொழுது உயிர் சூக்கும உடம்பளவாய் நிற்கும்` எனவும், தூல உடம்பு உள்ளபொழுது அதனை உயிர் சூக்கும உடம்பு வழியாக இயக்கும்` எனவும் உணர்க - என உணர்த்தினமை காண்க. . ஈற்றில், `இரங்கத் தக்கது` என்பது அவாய் நிலையாய் நின்றது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage