
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
பதிகங்கள்

சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்
அவனை வழிபட்டங் காமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடிற் கூடலும் ஆமே.
English Meaning:
Holy Guru Shows the WayThe countless Devas worshipped Siva;
What becomes them
By worshipping Him?
Far better it be,
That you worship the Holy Guru
—Who, having himself worshipped Lord
Shows, the Way of Becoming, too;
Sure, indeed, is your Mukti definite.
Tamil Meaning:
அளவற்ற தேவர்கள் சிவனையை நேராகச் சென்று கண்டு வழிபட்டனர். ஆயினும் அவர்கள் பின்பு துன்பம் இன்றி வாழ்ந்ததாக வரலாறில்லை. பின்பும் துன்பம் எய்தியதாகவே வரலாறுகள் உள்ளன. ஆகையால், என்றும் துன்பமில்லா வாழ்வைப் பெறும் வகையில் சிவனை வழிபடும் முறையைத் தெரிவிக்கின்ற குருவை வழிபட்டால், அவரது அருளால் அவ்வழிபாட்டில் நின்று துன்பம் இல்லாத நிலையை அடைதல் கூடும்.Special Remark:
``புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்போக்குகின் றோம்அவ மே;இந்தப் பூமி
சிவன்உய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
... ... ... ... ... திருமாலாம்
அவன்விருப் பெய்தவும், மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்``
-8 திருப்பள்ளியெழுச்சி, 10
எனவும்,
``வானிடத்தவரும் மண்மேல் வந்தரன் றனைஅற் சிப்பர்``
-சிவஞானசித்தி. சூ. 2-92
எனவும், பிறவாறும் போந்த திருமொழிகளால், `தேவரும் நிலையான இன்ப வாழ்வை எய்துதற்கு மண்மேல் மானுடராய்ப் பிறந்து ஞான குருவால் ஆட்கொள்ளப்பெறல் வேண்டும்` என்பது தெளிவாதல் போலவே இந்நாயனாரும் தேவர், குருவை வழிபடாமல் சிவனை வழி பட்டுப் பெரும்பயன் எய்தாமையை எடுத்துக் காட்டிக் குரு வழிபாட்டினை வலியுறுத்தினார். `குரு வழிபாடே ஞான வழிபாடாம்` என்பது கருத்து.
``அங்கு`` இரண்டில் முன்னது `அத்தேவர்பால்` எனவும், பின்னது, `வழிபட்ட இடத்து` எனவும் கூறியபடி. ஆமாறு - பயனால் உயர்ந்த நிலை. ஒன்றில்லை - சிறிதும் இல்லை. பின்னர் வந்த ``ஆமாறு`` என்பதற்கு, `பயனால் உயரும் முறை` என உரைக்க. உம்மை உயர்வு சிறப்பு.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage