
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் 38. இதோபதேசம்
பதிகங்கள்

இங்கித்தை வாழ்வும் எனைத்தோ ரகிதமும்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத் துறையும் விகிர்தா எனநினை
நஞ்சற் றவர்க்கன்றி நாடாஒண் ணாதே.
English Meaning:
Pray in Pure HeartFilled with misery
Is life here below;
When to sleep in death
You near,
Praise the Pure One,
Of gem-hued Form;
Unless you in melting heart hail Him
As ``Oh, Lord, who in Light Divine abides``
You realize Him not.
Tamil Meaning:
இவ்வுலகில் தமக்கு வருகின்ற நன்மை, தீமை இரண்டினையும் அவை ஒரு நிகரனவாக நிற்க வைக்கும் காலத்தில் மாணிக்க வண்ணனாகிய சிவபெருமானை, அவனது ஞானத்திலே விளங்கும் தனியொரு பொருளாக உணர்ந்து அவ்வாறான அவனது பெருமையைச் சொல்லி நினைக்கின்ற தூய மனம் உடையவர்க்கன்றி, அவனை உணர இயலாது.Special Remark:
இன்று சில இடங்களில் `அங்கு, இங்கு` என்பன அங்கிட்டு, இங்கிட்டு, என வழங்குதல் போல் முற்காலத்தில்` இங்கு` என்பது` இங்கித்தை` எனச் சில இடங்களில் வழங்கிற்று என்பது, ``எங்கித்தைக் கன்மமெலாம் செய்தாலும்`` என்னும் சிவஞான சித்தி (சூ. 10.6)ஆட்சியாலும் விளங்கும். பின்னர், ``அகிதம்`` என வருதலால் ``வாழ்வு`` என்றது இதத்தையாயிற்று. துஞ்சுதல் - தங்குதல். முதனிலைத் தொழிற் பெயர். `ஒப்பத் தங்கிய காலத்து` என ஓதற்பாலதனை, `தங்குதல் ஒத்த காலத்து` என்றார். நன்மையையும் தீமையையும், ஒருபடித்தாக நோக்குதல் இருவினையொப்பு வந்த காலத்தன்றிக் கூடாது. இருவினை ஒப்போடு உடன் நிகழ்வன மல பரிபாகமும் சத்திநிபாதமும். இம் மூன்றும் எய்தப் பெற்றவர் இறைவனைத் துதித்தலே உண்மையுணர்ந்து துதித்தலாக ஏனையோர் துதிப்பனவெல்லாம் ``ஊரா மிலைக்கக் குருட்டா, மிலைத்த`` (தி.8 திருச்சதகம், 87)வாறாம் ஆதலின், இருவினையொப்பு வாய்த் தோர்க்கன்றித் தூய்மணி வண்ணனை ``நாட ஒண்ணாது`` என்றார். எனவே, `முன் மந்திரத்திற் கூறிவயாறு ஏனையோரைச் சொல்லி என்ன பயன் `என்றதாயிற்று. ``என - என்று சொல்லி என்க. `விஞ்ஞானத்து` என்பது, `விஞ்சானத்து` என மருவிப் பின் எதுகைக் கேற்பத் திரிந்து நின்றது. விஞ்ஞானம் - மேலான ஞானம்; பதி ஞானம். விகிர்தன் - ஏனை எல்லாப் பொருளினும் வேறுபட்ட தன்மையுடைவன். அத்தன்மை யாவது பாச, பசு, ஞானங்களால் பற்றவாராமை. ``நினை நஞ்சற்றவர்`` என்பது வினைத்தொகை. நஞ்சு - தீமை. அஃது இங்கு மனக்குற்றத்தைக் குறித்தது. `மணி` என்பது நீலமணியையேயன்றி மாணிக்கத்தையும் குறித்தல் வழக்காதல் அறிக. இதன் கண் இன எதுகை வந்தது.முதற்றொட்டு இதுகாறும் வந்த பதினைந்து மந்திரங்களாலும் யாவர்க்கும் பொதுவாகச் சிவவழிபாட்டினையே வலியுறுத் துணர்த்தினார். இனிவரும் நான்கு மந்திரங்களால் அச்சிவன் குருவாகி வந்து தன்னைக் காட்டப் பெற்றார்க்கு அவன் அக் குருவாய் நின்றே அருள்புரிவன் ஆதலின் அவரை நோக்கி, அக் குருவழிபாட்டினை வலியுறுத்துணர்த்துகின்றார். யாவருக்கும் சிவன் பொதுவாய்த் தாபர சங்கமங்களில் நின்று அருள்புரியினும் சிறப்பாக அவன் யார் யார்க்கு எவ்வெவ்வுருவில் நின்று அருள் புரிந்தானோ அவர்க்கு அவ்வுருவே சிவவடிவாம் என்பது உணர்க. ஆளுடைய பிள்ளையார் எங்கும் சென்று சிவனைக் கண்டு வழிபட்டாராயினும் திருக்கழுமலத் திருத்தோணி வீற்றிருந்தருளும் பெருமானையே தாம் சிறப்பாகக் கொண்டு வழிபட்டமை முதலியன இதற்குச் சான்றாகும். இவ்வாறான சிறப்பு வடிவங்களே அவரவர்க்கு ஆன்மார்த்த மூர்த்தி என்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage