
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி
பதிகங்கள்

நேயத்தே நிற்கும் நிமலன் மலம்அற்ற
நேயத்தை நல்கவல் லான்நித்தன் சுத்தனே
ஆயத் தவர்தத் துவம்உணர்ந் தாங்கற்ற
நேயத் தளிப்பன்நன் நீடுங் குரவனே.
English Meaning:
Holy Guru Assesses Worth of His DisciplesHe is a pure being
He is so endearing;
He can give you love,
That is from Malas free;
He is immortal,
He is holy;
He assesses the worth of his disciples;
And on those who are impurity rid,
He bestows his grace;
He, the Master High.
Tamil Meaning:
நித்தியனாகிய சிவன் நின்மலன் ஆகலின், அவன் மலம் நீங்கித் தன்பால் மெய்யன்பு செலுத்துவோரது அறிவிலே விளங்கி நின்று அம்மெய்யன்பினை மேலும் மேலும் பெருக்க வல்லவ னாவன். ஆகையால், மலம் நீங்கிச் சுத்தான்மாவாய் நிற்கின்றவனே தன்னை அடைந்த மாணவக் கூட்டத்தாரது உண்மை நிலையை உணர்ந்து, அவர்களில் பாசப் பற்று அறும் பக்குவத்தை எய்தி னோர்க்கே ஞானத்தை உணர்த்துவன். ஆதலால் அவனே நிலைபெற்ற சற்குரு ஆவன்.Special Remark:
`சுத்தான்ம சைதன்னியத்திலே சிவன் தான் அதுவே யாய் ஆவேசித்து நிற்றல் பற்றியே குரு சிவனாகின்றான்` என்பதை உணர்த்தற் பொருட்டு அவ்வியல்பை முதல் இரண்டு அடிகளில் கூறி, பின்பு, `சுத்தன்` என எடுத்துக்கொண்டு, ``சுத்தனே நீடும் குரவன்`` என்றார். `நித்தன் நிமலன் ஆதலின் மலம் அற்ற நேயத்தே நிற்கும்; நேயத்தை நல்க வல்லோன்` எனக் கூட்டுக. அறும் பக்குவத்தை எய்திய நிலையைத் தெளிவு பற்றி, ``அற்ற`` என இறந்த காலத்தாற் கூறினார். குரவரல்லா தாரைக் `குரவர்` என மயங்கிய மாணாக்கர் பின்பு அவரின் நீங்கி உண்மைக் குரவரை யடைவர் ஆகலின் அவர் அங்ஙனம் ஆகாமைக்கு ஏதுவாய் நிற்பவனை `நீடும் குரவனை` என்றார்.இதனால், `பெத்தத்தின் நீங்கிய சுத்தனே சிவமாய் நிற்கும் சற்குரு` என்னும் உண்மை எடுத்துக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage