
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 36. கூடா ஒழுக்கம்
பதிகங்கள்

கன்னி ஒருசிறை கற்றோர் ஒருசிறை
மன்னிய மாதவம் செய்தோர் ஒருசிறை
தன்னியல் புன்னி யுணர்ந்தோர் ஒருசிறை
என்னிது ஈசன் இயல்பறி யாரே.
English Meaning:
How the Lord is SeatedThe Virgin Sakti on one side
The learned ones on one side,
The Tapasvins steadfast on one side,
The Self-Realized beings on one side,
Thus is the Lord seated;
How is it they know not His nature true!
Tamil Meaning:
திருவருட்சத்தி பதிவு எல்லோர்க்குமன்றி ஒரு சிலர்க்கே உண்டாவதால் உண்மை நூல்களை ஓதுதலை சிலர் செய்தும், மற்றும் சிலர் சிவனைக் கிரியா முறையில் வழிபடுதலைச் செய்தும், மற்றும் சிலர் யோகம் புரிதலைச் செய்தும் மற்றும் சிலர் சிவனது உண்மை நிலையைக் கேட்டல் சிந்தித்தல் தெளிதல்களால் உணர் தலைச் செய்தும் நிற்கின்றனர். ஆகவே, மிகப்பலர் இவற்றுள் ஒன்ற னையும் செய்யாது சிவவேடத்தை மட்டும் புனைந்து கொண்டு திரி கின்றனர். இஃது என்ன முறைமை!Special Remark:
முதற்கண் `ஒரு சிறையே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அதன்பின், `அதனால்` என்னும் சொல்லெச்சம் வருவித்துரைக்க. மூன்றாம் அடியிறுதியில் `ஆகின்றனர்` என்னும் பயனிலை அவாய் நிலையான் வந்து இயைந்தது. எதிர்காலத்தாற் கூறாது. இறந்தகாலத்தாற் கூறியது அவர் அந்நிலையில் முற்றினமை குறித்தற்கு. ``என் இது`` என்ற குறிப்பால், `வேடத்தை மட்டும் புனைந்துகொண்டு திரிகின்றனர்` என்பது இசையெச்சமாய் வந் தியைந்தது. `சத்திநிபாதம் தானும் ஒரு வகையாகாது பலவகையாய் நிகழ்தலின், சிவநெறியில் நிற்போரும் பலதிறத்தராயினர். அது முறைமையே, சத்திநிபாதம் வாயாதவரும் வாய்ந்தார்போல நடித்தல் என்னமுறை` என்றபடி. `அது முறைமையன்றாகவே அதன் விளைவை அவர் பெறுவார்` என்பது கருத்தாயிற்று. அதிகாரம் சத்தி நிபாதர்களைப் பற்றியதாகவும் இடையே பிறரைப்பற்றியும் கூறினார், `சத்திநிபாதரும் தற்போதத்தால் ஏலாத செய்யின் சத்தி நிபாதர் அல்லாதவரோடு ஒருங்கொத்தவராவர்` என்பது உணர்த்துதற்கு, இதுவே இம்மந்திரத்தின் திரண்ட கருத்து என்க.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage