
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 16. சத்திநிபாதம்
பதிகங்கள்

செய்யன் கரியன் வெளியன் பசியனென்
றெய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
ஐயனற் கண்ணல் லடுகரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே.
English Meaning:
Lord is Soul`s RedeemerHe is the Red One (Destroyer)
The Dark One (Preserver)
The White One (Creator)
The Green One (Redeemer)
They who know Him thus, free of doubt
Of a certain shall seek Him;
Remember this;
His are the sinewy arms
That skinned the dark massive elephant
And donned it for a vesture;
Do therefore, seek Him and adore Him.
Tamil Meaning:
சிவனை யடையும் வேட்கை யுண்டாயினோரே, அவனை, `சிவப்பன்` என்றோ, `கறுப்பன்` என்றோ. `வெளுப்பன்` என்றோ, `பச்சையன்` என்றோ நன்கு உணரவல்லவராவர். ஆதலால், அவனை, `நெருப்புமிழுங் கண்களையுடைய பெரிய கொலை யானையை யாவரும் வியக்கும் வண்ணம் உரித்து அத்தோலைப் போர்த்த வெவ்விய கையை உடையவன்` என்று அறிந்து அவனை அடையும் வேட்கையுடையீராகுங்கள்.Special Remark:
முதலடியின் ஈற்றில் நின்று, முன் வந்த எல்லாவற் றோடும் இயைந்த ``என்று`` என்னும் எண்ணிடைச் சொல் விகற்பத் தின்கண் வந்தது. எய்த உணர்தல், அடைய விரும்புதல். எய்வர் - அறிவார். ``ஐ`` வியப்பு `ஐயெனெப் போர்த்த` என்க. கரி, ஆகுபெயர். `மைவென் றகன்ற பகடுரி போர்த்தவன்` என்பது பாடமாகவும் ஓதுப. யானையை உரித்துப் போத்தமை அவனது எல்லாம் வல்ல தன்மையை வெளிப்படையினாலும், ஐம்புல ஆசையை அறுக்கும் தன்மையைக் குறிப்பினாலும் உணர்த்தி, அவற்றை உணர்தல் அவன் மாட்டு அன்பு நிகழ்தற்கு ஏதுவாதலைக் கொள்ள நின்றது. `சிவனை அடையும் காதல் உடையவரே அவனை அடைதல் கூடும்; ஆதலின், அக்காதல் உண்டாதற்கு ஏதுவாய அறிவைப் பெறுங்கள்` என்றவாறு. `அவ்வறிவும், அதன் வழியான இக்காதலும் சத்திநிபாதத்தால் உண்டாம்` என்பது கருத்து. இரண்டாம் அடியின் ஈற்றில், `ஆகலான்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.இதனால், சத்திநிபாதம் சிவஞானத்திற்கும், சிவ பக்திக்கும் ஏதுவாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage