
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 11. அட்டமா சித்தி
பதிகங்கள்

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி ஆகம் அறிந்திடில் ஓராண்டுப்
பொற்கொடி யாய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே.
English Meaning:
Kamarutatva (Kamavasayitha)After attaining Vasitva Siddhi
The Siddha perseveres in the knowledge of Sakti,
And of Siva who Her body shares;
And then a year thereafter
He attains the powers to visit worlds all,
That hang from the golden stalk of the Cosmic Flower;
Sitting inert like a flag of stone
Attains Siddhi Kamarutattva (Kamavasayitva)
>
Tamil Meaning:
ஞான உருவான திருவருளோடு கூடி, அதனது இன்பத்தை யோகி ஒருவன் அறிவானாயின், அதன் பின் ஓராண்டுக் காலத்தில் பொன்மயமான கொடிகளும், தருக்களும் நிறைந்த விண்ணுலகங்களில் சென்று மீள வல்லவனாவான். ஆயினும், அவன், மேருவை அடைந்து பொன்னிறத்தைப் பெற விரும்புகின்ற காக்கையினது ஆசைபோன்ற அவ்வாசையை உடையனாவனோ!Special Remark:
அஃதாவது, `அச்சித்தியின் வழி விண்ணவர் உலகங்களிற் சென்று மீளுதலால் தானும் விண்ணவன் எனச் சொல்லப் படும் பெருமையை அடைய விரும்புவனோ! விரும்பான்` என்பதாம். ஆகம் - உரு; இயல்பு. ``வரும்`` என்றது, `வரத்தக்க ஆற்றல் பெறும்` என்றபடி. கல் - மலை; அஃது இங்கு, மேருவைக் குறித்தது. இதனை அடுத்துள்ள `கொடி` காகம். காகம் மேருவை அணுகியவிடத்து அதன் ஒளியால் தானும் பொன்னிறம் உடையதுபோலத் தோன்றுதலன்றி, உண்மையில் தன் நிறம் மாறப் பெறுதல் இல்லை. அதுபோல, மனித உடம்பு விடப்படுங்காறும் யோகி உண்மையில் தேவனாதல் இல்லை, ஆகவே, இவ்வுடம்பில் நின்றே, `தேவன்` எனப்பெறும் பொய்யான புகழைச் சிவயோகி விரும்பான் என்பதாம். ஏகாரவினா எதிர்மறைப் பொருள் உணர்த்திற்று. இனி ஏகாரத்தை ஈற்றசையாக்கின், ``கற்கொடி ஆகிய`` என்பதற்குக் `கல்லின்மேல் முளையாத கொடிபோலத் தனது உள்ளத்தில் தோன்றாத ஆசையையுடையவனாவன்` என உரைக்க. `தோன்றாத ஆசையை உடையவன்` என்பது, `ஆசை தோன்றாமை உடையவன்` என்னும் கருத்தினதாம்.இதனால், `அட்டமா சித்திகளும் கைவந்தவர்கட்குப் பிற உலகங்களிலும் செல்லும் ஆற்றல் கூடும்` என்பதும், `அது கூடினும், சிவயோகி, அவ்வாறெல்லாம் உழலும் தன்மையன் அல்லன்` என்பதும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage