
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 8. தியானம்
பதிகங்கள்

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.
English Meaning:
In the undistracted gazeAppears the Light
Gaze and gaze to heart`s content
And mingle one with it;
The Heavenly Stream will then surge
To the spaces infinite of Void Space;
Then may the Uncreated Being witnessed be.
Tamil Meaning:
புறத்தில் உள்ளவர்களால் பார்க்க இயலாத கண்ணில் (திறவாது மூடியிருக்கின்ற நெற்றிக் கண்ணில்) மின்னல் போலத் தோன்றிய ஒளியைப் பின் அக்கண் நிரம்பக் குறைவின்றிப் பார்த்து, அதனொடு உணர்வு ஒன்றியிருப்பின், பிற முயற்சிகளுள் யாதும் செய்யாமலே அந்த ஒளியை நன்கு தரிசித்திருக்கலாம்.Special Remark:
ஒண்ணா நயனம் - பிறர் `கண்` என்று உடன்படவே முடியாத கண். `அக் கண்ணார` எனச் சுட்டு வருவிக்க. விண் ஆறு - வான் வழி. `சென்று` எனற்பாலது, ``வந்து`` என இடவழுவமைதியாய் நின்றது. ``கண்டிட`` என்பது, `அளந்தறியுமாறு` என்றபடி. அஃதாவது, `வான் வெளி முழுதும் ஓடி` என்பதாம். `ஓடிப் பண்ணாமல்` என்றது, `இவ்வாறெல்லாம் உழல வேண்டாமல்` என்றவாறு `ஞான யோகம் செய்ய மாட்டாமையால் இறைவனைக் காணுதற்குச் சிலர் தாம் பெற்ற சித்தியால் ஆகாயத்தில் சென்று அவனைப் பல இடங்களில் தேடியும், பிரமன் முதலிய தேவர்கள் வானவெளியில் தேடி உழன்றும் எய்க்கின்றனர்; அவை வேண்டா` என்றபடி. `நின்று பார்க்கலும் ஆம்` என இயையும். உம்மை, சிறப்பு.இதனால், ஆஞ்ஞைத் தியானத்தின் சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage