
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
பதிகங்கள்

மெய்வாய்கண் மூக்குச் செவியெனும் மெய்தோற்றத்(து)
ஐவாய அந்தக் கரணம் அகிலமும்
எவ்வாய் உயிரும் இறைஆட்ட ஆடலால்
கைவாய் இலாநிறை எங்கும்மெய் கண்டதே.
English Meaning:
Pervasive Truth FormThe five sense organs external
The four cognitive organs internal
The worlds all, and lives all
All, all, are by Lord swayed;
He is the pervasive Truth Form
That neither hand nor mouth has.
Tamil Meaning:
`மெய், வாய், கண், மூக்கு, செவி` எனப் படுகின்ற ஐந்து புற அறிவுக் கருவிகளும், `மனம், புத்தி, சித்தம், அகங்காரம்` எனப்படுகின்ற நான்கு அக அறிவுக் கருவிகளும், பிறவும் கூடிய உடம்புகளும், அறிவின்றி விரிந்து பரந்துள்ள பல உலகங்களும், அவற்றைச் சார்ந்து எவ்விடத்தும் அறிவையும் இன்பத்துன்ப நுகர்ச்சிகளையும் பெற்று வருகினற அளவற்ற உயிர்களும் ஆகிய அனைத்தும் சிவன் ஆட்டவே ஆடுகின்றன. இதனை, ``ஆட்டு வித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே``* என்னும் திருமுறையும், ``அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது`` என்னும் முதுமொழியும் விளக்கி நிற்கின்றன. அதனால் சிவனது கை, வாய் முதலிய உறுப்புகளுள் யாதொன்றும் இல்லாத பெருநிறைவு எங்கும் உள்ளதாகிய அத்துவித உண்மை அருளாளரால் நன்குணரப்பட்டது.Special Remark:
சத்தினை உபநிடதம் `அத்துவிதம்` எனக் கூறியது, `அஃது அனைத்துப் பொருளிலும் உடலில் உயிர் போலக் கலப்பினால் ஒன்றாயும், கண்ணில் அருக்கன்போலப் பொருள் தன்மையால் வேறாயும், உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாயும் இயைந்து நிற்கும் இயைபினைக் குறித்தது` என்பதை சித்தாந்தம் ஆகலின், `அவ்வுண்மையை உணர்ந்தோரே மகாவாக்கியப் பொருளை அனுபவமாக உணர்வர்` என்றற்கு இங்ஙனம் வகுத்தோதி முடிக்கப்பட்டது. இதனானே வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறும் அறிக. மெய்த் தோற்றம் - புறத்துக் காணப்படுதல். `ஐ வாயவும், அந்தக் கரணமும்` என அவற்றிலும் உம்மை விரிக்க. ``நிறை`` என்பதற்கு, `அவனது நிறை` என வருவித்துரைக்க. `எங்கு ஆம் மெய்` என்க. கண்டது - காணப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage