
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
பதிகங்கள்

அறிவார் அறிவன அப்பும் அனலும்
அறிவார் அறிவன அப்பும் கலப்பும்
அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்
அறிவான் அறிந்த அறிவறி யோமே.
English Meaning:
Knowledge Comes Only if God Makes Us KnowThey of Knowledge True
Know Siva
Who Water and Fire at once are;
They of Knowledge True
Know Siva
Who stands as Fire and Water (Siva-Sakti) commingled;
Unless the Knower within
Makes you know,
We know not what your knowledge avails.
Tamil Meaning:
பொருள்களைத் தாமாக அறிபவர் யாவரும் அறியும் பொருள்கள் காட்சிப் பொருள்களே. அவையேயன்றிக் கருத்துப் பொருள்களும் உள ஆதலால், அவற்றை அறிவிப்பவன் ஒருவன் இருந்துகொண்டு அறிவித்தாலன்றி, அறிபவன் தானே அறிந்து பெற்ற அறிவாக நாம் எந்த அறிவையும் அறிகின்றிலம்.Special Remark:
`மெய்ப் பொருள் அறிவு ஆசிரியனையின்றி உண்டாகாது` என்றபடி. ``அறிவார்`` என்றது, தாமாகவே அறிபவ -ராகத் தம்மைக் கொள்பவரை, அவரது மதம் பற்றிக் கூறியது. இவர் `ஆசிரியன் வேண்டா` என இகழ்பவர். இரண்டாம் அடியில் `அப் பூவும்` என்பது, `அப்பும் எனத் திரிபெய்திநின்றது. அன்றேல், கூறியது கூறிற்றாம். ``வானிற் கலப்பு வைத்தோன்``3 என்றாற் போலும் திரு மொழிகளை அவர் கொள்ளமை பற்றி, எங்கும் சென்று கலப்பதாகிய காற்றையே இங்குக் ``கலப்பு`` என்றார். எனவே, `காணாதான் - கண்டானாம் தான் கண்டவாறு``9 என்னும் பொதுமறை மொழிக்கு இலக்கியமாய் உள்ளார் உடன்படுவனவாகிய நான்கு பூதங்களையே இங்குச் செய்யுட்கு ஏற்பச் சொற்சுருங்கி வர, ஏற்ற பெற்றியால் கூறினார் என்க. ``காட்சிப் பொருளன்றிக் கருத்துப் பொருள் இல்லை` என்பவரை, `உலகாயதர்` என்றும், `சாருவாகர்` என்றும் `பூத வாதிகள்` என்றும் கூறுவர். ``அறிவான்`` இரண்டில் முன்னது, `முன்பே அறிந்துள்ளவன்` எனவும், பின்னது, `இனி அறிபவன்` எனவும் பொருள் பயந்தன. தொடர் வேறாகலின் பின்னதில் பன்மை யொருமை மயக்கம் இன்மை அறிக. இனிப் பின்னரும், `அறிவார்` என்றே பாடம் ஓதலும் ஆம். ``அறிவான்`` என்பதை ஆன் உருபு ஏற்ற பெயராக உரைத்தல் பொருந்தாமையறிக.இனிக் காட்சிப் பொருள்களையும் முதற்கண் முதியோர் அறிவிக்கவே அறிதல் அனுபவம் ஆதலின், `மெய்ப் பொருளை யாமே அறிவோம்` என்றல் பொருந்தாமை உணரப்படும். `சித்தாந்த நெறி ஆசிரியன் அருளை வேண்டு நிற்பதே` என்பதை நாயனார், மேலெல்லாம் பலவிடத்தும்* கூறினார், மேலும் கூறுவார்.
``எமக்கென் எவனுக்கு எவைதெரியும், அவ்வத்
தமக்கவனை வேண்டத் தவிர்``
``ஞானம் இவன்ஒழிய நண்ணியிடும், நற்கல்அனல்
பானு ஒழியப் படின்``9
என்றாற்போலச் சாத்திரங்களும் குருவருளை வலியுறுத்தி ஓதுதல் காண்க.
இதனால், மேற்கூறிய ஞான நெறி, ஆசிரியன் அருளையின்றி அமையாது` என்பது, `அது வேண்டா` என்பாரை நோக்கி வலியுறுத்தப்பட்டது.
(இதன்பின், ``அதீதத்துள் ளாகி அமர்ந்தவன் நந்தி`` என்னும் மந்திரம் மேல், `பரலட்சணம் என்னும் அதிகாரத்தில் வந்தது.)
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage