
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
பதிகங்கள்

ஆறா றகன்ற அணுத்தொம் பதம் சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
வீறான தொந்தத் தசிதத்வ மசியே.
English Meaning:
Beyond Experiences in the Three Suddha StatesTvam-Pada transcends Tattvas six times six;
That is State Suddha;
Then is Tat-Pada;
That leads to Upasanta;
Then is Asi-Pada where Siva is;
Ultimate is the blessed State
Of Tvam-Tat-Asi that is Tat-Tvam-Asi.
Tamil Meaning:
(சகலாவத்தையில் தொம்பதப்பொருளாய் நின்ற தத்துவ வன்ன ரூபியான ஆன்மாச்) சுத்தாவத்தையில் தத்துவம் அனைத் தினின்றும் நீங்கித் தூயதாய்த் தொம்பதப் பொருளாய் நிற்கும். தத்பதப் பொருளாகிய, எல்லாப் பொருட்கும் முடிவாய் உள்ள சொரூப சிவம் எப் பொழுதுமே பரதுரியத்தில் உள்ளது. அதனை அத்துரியத்தில் அடைந்த ஆன்மா அவ்வாறு குருவருளால் அசுத்தத்தின் நீங்கிச் சுத்தத்தை எய்தி, சிவமாய் நிற்கும் பேற்றினையளிக்கின்ற, `தொம் தத்தசி` என்னும் பதத்தின் பொருளே `தத்துவமசி` மகாவாக்கியத்தின் பொருளாகும்.Special Remark:
`சகலாவத்தையில் தத்துவ வன்னரூபியாயும், சுத்தா வத்தையில் தூயதாயும் நிற்கும் ஆன்மாச் சிவத்தின் வேறானதே யாதலால், அது சிவமாவது, `சோயம் தேவதத்தன்` என்பதிற் போல, உபாதியுடன் நின்ற சிவம் அவ்வுபாதியின் நீங்கி அதுவாதல் அன்று; நீல மணியைச் சார்ந்து நீல மணியாய் நின்ற படிகமணி, மாணிக்க மணியைச் சார்ந்து மாணிக்க மணியாய் நின்றது போல்வதேயாம்` என்றபடி.`தத்துமசி` என்பது, `சோயம் தேவதத்தன்` என்பதுபோல என்பவர், உபாதியுட்படுவதும் அதனின்றும் நீங்குவதும் ஆகிய அதனையே `பிரம்மம்` என்கின்றமையால், `அவர் பசுவையே பதியாகக் கருதுகின்றனர்` என்பது பெறப்படும் ஆகவே, அவரது பிரம்ம ஞானம் பசு ஞானமேயாகின்றது, இதனைச் சிவஞான சித்தியார்,
``நணுகி ஆன்மா இவை கீழ் நாடலாலே,
காதலினால் `நான் பிரமம்` என்னும் ஞானம்
கருது பசு ஞானம்``9
எனக் கூறிற்று.
பதங்களின் பொருள்களைப் பதங்களாகவே உபசரித்துக் கூறினார். `சுத்தத்து` என்னும் அத்துச்சாரியை தொகுத்தலாயிற்று. ``தற்பதம்`` என்றதும் அதன் பொருளையே தற்பதம் பேறாகிய` என இயையும் பேறாதலாவது, பெறப்படும் பொருளாதல், ``ஆகிய`` என்னும் பெயரெச்சம், `அரசன் ஆகொடுத்த பார்ப்பான்` என்பது போல, ``சீவன்`` என்னும் கோடற் பொருட்பெயர் கொண்டது. `பிர சாதத்து நீங்கி` என மாறுக பிரசாதம், குருப் பிரசாதம் `பிரசாதத்தால்` என உருபு விரிக்க. நீங்குதல், பாசத்தினின்று. வீறு - மேன்மை. ``ஆன`` என்னும் பெயரெச்சம் ``தொந்தத்தசி`` என்னும் ஏதுப் பெயர் கொண்டது.
இதனால், `தத்துவமசி` மகாவாக்கியம் பாருள் படுமாறெல்லாம் இனிது விளக்கப்பட்டன.
[இதன் பின் பதிப்புக்களில் காணப்படும், ``ஆகிய அச்சோயம் தேவதத்தன்`` என்னும் மந்திரம், மேல்`` ``முச்சூனிய தொந்தத்தசி`` அதிகாரத்தில் வந்தது.]
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage