
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 36. `தத்துவமசி` மகாவாக்கியம்
பதிகங்கள்

நின்மல மேனி நிமலன் பிறப்பிலி
என்னுளம் வந்(து) `இவன் என் அடியான்` என்று
பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன்
நின்மலன் ஆகென்று நீக்கவல் லானே.
English Meaning:
Acceptance in GraceOf Form Pure, Holy, Birthless,
He in me came and said;
``You are in My Grace received;
Be Pure``
Thus He blessed me,
And my blemishes removed;
He of Golden Form,
Heavenly Lord whom Celestials praise.
Tamil Meaning:
வேதங்களில், `பொன்னிறம் விளங்க நிற்பவன்` (இரணிய கருப்பன்) எனப் புகழப்படுகின்ற சிவன், இயல்பாகவே மலம் இல்லாத தூயோன் ஆதலின் பிறப்பில்லாதவனாய் அருளே திருமேனியாகக் கொண்டு, `இவன் என்னுடைய அடியவன்` என்று கருணைகூர்ந்து, என் உள்ளம் மகிழும்படி என் எதிர்வந்து இவனும் என்னைப் போல மலம் நீங்கித் தூயன் ஆகுக` எனக் கருதுதல் செய்து, அவ்வாறே நீங்குதற்கரிய எனது மலத்தை நீக்கவல்லவனாயினான்.Special Remark:
`இதற்கு யான் அவனுக்கு அடிமை பூண்டிருந்ததே காரணம்` என்பது இசையெச்சமும், `எனவே, பிறரும் அவனுக்கு அடிமை பூண்பாராயின், அவன் அவ்வாறு வந்து அருள்புரிவன்` என்பது குறிப்பெச்சமும் ஆம். நின்மலன் ஆகுக எனக் கருதினான்` என்றது, ``அயமத்மா பிரஹ்மம்``, அல்லது ``சோய மஸ்தி`` என்னும் மகாவாக்கியத்தைப் பயன்படுத்தியதைக் குறித்ததாம். ஆகவே, ``வந்து`` என்றது குருவாகி எதிர் வந்தததைக் குறித்தாயிற்று. அதனால், ``என் உளம்`` என்பதன் பின் `மகிழ` என்பது சொல்லெச்சமாய் எஞ்சிநின்றதாம். மூன்றாம் அடியை முதலிற் கூட்டுக. அன்றி, `அஃதே பாடம்`` என்றலுமாம். மேனி, மேனியனைக் குறித்த ஆகுபெயர். நின்மல மேனியன் ஆதற்குக் காரணம் பிறப்பின்மையும், பிறப்பின்மைக்குக் காரணம் மலம் இன்மையுமாம். ``மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோரர் வடிவமாகும்``8 என்பது சிவஞான சித்தி. `பொன்வளர் மேனி என` என்று, `என` என்து வருவிக்க. `ஆக` என்னும் வியங்கோளின் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. ``வல்லான`` என்பது இறந்த கால வினைக் குறிப்புப் பெயர்.இதனால், மகாவாக்கியம் பற்றித் தமது அனுபவம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage